Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 5, 2025

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்


எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கு ஜூன் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். தேசிய தேர்வு முகமையிடம் இருந்து நீட் மதிப்பெண் பெற்று கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலயில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கூட்டரங்கில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான (இளங்கலை மருத்துவ படிப்புகள்) இடப்பங்கீட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, தேர்வுக்குழு செயலாளர் தேரணிராஜன், துணை இயக்குநர் கராமத் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டது. கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறுவது மற்றும் தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணம் தவிர விடுதிக் கட்டணம் போன்ற பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிட்டு பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு முடிவு வெளியாவது தாமதம் ஏற்படும் போது, மாணவர்களின் விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் மிகவும் குறைவதால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

அதனால், இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் 12-ம் வகுப்பு இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் பெறப்பட்டால் மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதுடன், விண்ணப்பங்கள் சரி பார்ப்பதற்கும் அதிக கால அவகாசம் இருக்கும். மாணவர்களுக்கு சிரமம் குறைவதுடன் சரிபார்ப்பு பணிகளும் சிறப்பாக நடைபெற்று, தவறான மற்றும் போலியான விண்ணப்பங்களை நிராகரிக்க வசதியாக இருக்கும்.

இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, ஜூன் மாதம் 6-ம் தேதி முதல் இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துக்கான கால அவகாசம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கான சிரமங்கள் வெகுவாக குறையும். மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் கொள்ள தேவையில்லை. வழக்கமாகவே மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு மதிப்பெண்கள் தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே சரிபார்க்கப்படும். எனவே தற்போதும் மாணவர் பதிவேற்றம் செய்யும் நீட் வரிசை எண் மற்றும் நீட் நுழைவுச்சீட்டு அடிப்படையில் தேசிய தேர்வு முகமை அளிக்கும் மதிப்பெண்கள் பெறப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். அந்த கால அவகாசம் 5 நாட்கள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment