Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பள்ளி மாணவர்களுடன் ஹைடெக் லேப் வழியாக வீடியோ கான்பரன்சில் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் திட்டம் துவக்கவுள்ள நிலையில், இணையசேவை உட்பட ஹைடெக் லேப்களில் நிலவும் பிரச்னைகள் சவாலாக உள்ளது என தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஹைடெக் லேப் வசதியுள்ள 6,329 உயர், மேல்நிலை பள்ளி மாணவர்களுடன் ஒரே நேரத்தில் முதல்வர் பேசும் நிகழ்ச்சியை, ஜூன் 15ல் நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பள்ளிகளில் உள்ள லேப்களை தயார் நிலையில் வைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஹை டெக் லேப்களுக்கு இணையசேவை கிடைக்காதது, இணைய சேவை கட்டணத்தை அரசு வழங்காதது, இணைய இணைப்பு இல்லாதது போன்ற பிரச்னைகள் உள்ளன. 'லேப்'களை தயார்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றால் பிரச்னைகளை சரிசெய்து ஜூன் 15ல் லேப்கள் நல்ல முறையில் செயல்பட ஏற்பாடு செய்யுங்கள் என கறார் காட்டி எச்சரிக்கின்றனர். முதல்வர் பங்கேற்கும் இதுபோன்ற திட்டத்திலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டும் நடவடிக்கையால் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தற்போது 6,329 அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் ஹைடெக் லேப்கள் (அதிநவீன உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள்), ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. இங்கு இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராம பள்ளிகளில் அப்பகுதியில் கிடைக்கும் இணையசேவைக்கு ஏற்ப தனியார் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன.
ஆனால் சில மாதங்களாக பி.எஸ்.என்.எல்., இணைப்பு தான் அனைத்து பள்ளிகளிலும் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. பல கிராமங்களில் பி.எஸ்.எல்.என்., சேவை கிடைக்கவில்லை. லேப் வசதிக்கு ஏற்ப ஹைஸ்பீடு சேவையும் இல்லை. மாதம் ரூ.1500 கட்டணம் வழங்கிய நிலையில், பி.எஸ்.எல்.என்., இணைப்புக்கு பின் ரூ.900 ஆக குறைக்கப்பட்டது. அதுவும் 4 மாதங்களாக அரசு வழங்கவில்லை. ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார்நிலையில் வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது எவ்வகையில் சாத்தியம் என தெரியவில்லை. களத்தில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment