Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 14, 2025

உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் நியமனம்; கல்வித்துறை முக்கிய உத்தரவு


அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்; முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள் விலக விரும்பினால் தகுதியான மற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24, 2024-25 ஆம் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பெயர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைவதன் வாயிலாக மட்டுமே அவர்கள் உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்ய இயலும். இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மாற்றப்பட்டனர். அதனுடன், கூடுதலாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களில் எவரேனும் பணிபுரிந்த பள்ளியிலிருந்து பணி மாறுதல், பணி நிறைவு பெற்று இருப்பின் அல்லது 3 ஆண்டுகளாக உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணியாற்றி, இந்த கல்வியாண்டில் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விலக விரும்பும் ஆசிரியருக்குப் பதிலாக பள்ளியில் பணியாற்றும் தகுதியுள்ள மற்றொரு ஆசிரியரை புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும். 

அதன்படி 250 மாணவர்களுக்கு ஓர் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் என்ற விகிதத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்து ஜூன் 25 ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். தொடர்ந்து அதனை எமிஸ் தளத்தில் புதுப்பிக்க வேண்டும்.

மேலும் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் எமிஸ் தளத்தில் பதிவு செய்வதன் வாயிலாக மட்டுமே நடப்பு கல்வியாண்டில் நடக்கும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியின்போது வருகைப்பதிவு மற்றும் மதிப்பீட்டுத் தேர்வினை மேற்கொள்ள இயலும்.

எனவே அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தக்க வழிகாட்டுதல்கள் வழங்கி அனைத்து உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment