Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 30, 2025

Cellphone பயன்படுத்த மாணவர்களுக்கு தடை; பள்ளிகளில் அமல்படுத்த கல்வி துறை உத்தரவு


பள்ளிகளில் மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டும். அத்துடன், வண்ண மணிக்கட்டு பட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதையும் தடை செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் விபரம்:

அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும், சமூக பிரச்னைகள், ஜாதி பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க திட்டமிட வேண்டும்

ஒவ்வொரு வகுப்பறையிலும், மாணவர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு, உயரத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றி அமைத்து, அமர வைக்க வேண்டும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தவிர பிற மாணவர்களை, 15 நாட்களுக்கு ஒருமுறை, வரிசை மாற்றி அமரச் செய்ய வேண்டும்

மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது

வகுப்பாசிரியர் நேரடியாக அல்லது மறைமுகமாக, மாணவர்களின் ஜாதியை குறிப்பிட்டு அழைக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது

மாணவரின் உதவித்தொகை தொடர்பாக பெறப்பட்ட தகவல் தொடர்பு விபரங்களை, வகுப்பறையில் அறிவிக்கக்கூடாது. மாணவர்களை தனியே அழைத்து வழங்க வேண்டும்

மாணவர்கள் கையில் வண்ண மணிக்கட்டு பட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதை தடை செய்வதுடன், அவற்றை அணிவதை தடுக்க, பெற்றோருக்கு ஆலோசனையும் வழங்க வேண்டும்

மாணவர்கள் தங்கள் ஜாதியை குறிப்பிடும் அல்லது ஜாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் சைக்கிள்களில் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தவறினால் அவர்களின் பெற்றோரிடம் அறிவுறுத்துவதோடு, கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பள்ளி வளாகங்களில், மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடை செய்வது, கட்டாயமாக்கப்பட வேண்டும்

அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அனைத்து மாணவர்களுக்கும் நன்னெறி வகுப்புகள் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்

மாணவர் யாரேனும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டால், அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க, பெற்றோருக்கு தலைமை ஆசிரியர் பரிந்துரைக்க வேண்டும்

மாணவர்களுக்கு பள்ளி அளவில், வழிகாட்டி ஆசிரியராக ஒருவரை நியமிக்க வேண்டும். மாணவியருக்கு, பெண் ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும்

அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, வழிகள் என, அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்

அனைத்து வகுப்புகளிலும், விளையாட்டு பாட வேளைகளில், மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்

தவறான தகவல்களை பிறருக்கு பகிரக்கூடாது. சமூக ஊடகங்களை நேர்மறையான வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வருகிறது வாட்டர் பெல் திட்டம்


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வாட்டர் பெல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளார். மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், வாட்டர் பெல் திட்டத்தை செயல்படுத்தும்படி, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்கள் தேவையான குடிநீர் அருந்துவதால், உடல்நலம், கவனிப்பு திறன் மேம்படும்; சோர்வு விலகும். எனவே, அனைத்து மாணவர்களும், வீட்டில் இருந்து குடிநீர் பாட்டில் எடுத்து வர அறிவுறுத்த வேண்டும். பள்ளியில் காலை வணக்க கூட்டத்தில், குடிநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை, மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

பள்ளி வகுப்பு இடைவேளையின் போது அடிக்கப்படும் மணியோசைக்கு பதிலாக, குடிநீர் இடைவேளைக்கு, வேறு விதமான மணியோசையை எழுப்ப வேண்டும். இதை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது மாணவர்கள், தங்களுக்கு தேவையான தண்ணீரை குடித்து கொள்ள வேண்டும்.

வாட்டர் பெல் காலை 11:00 மணி, பகல் 1:00 மணி, மாலை 3:00 மணி என, மூன்று வேளை ஒலிக்க வேண்டும். அப்போது மாணவர்கள் குடிநீர் அருந்த, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் அனுமதிக்க வேண்டும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் குடிநீர் அருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் பெயர் இல்லை

தி.மு.க., ஆட்சியில், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அமைச்சர் மகேஷ் கூறிவரும் நிலையில், அவரது துறையில் செயல்படுத்தும் திட்டத்திற்கு தமிழில் பெயர் வைக்காமல், ஆங்கிலத்தில், வாட்டர் பெல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையும், ஆங்கிலத்திலேயே அனுப்பப்பட்டுள்ளது

No comments:

Post a Comment