Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 2, 2025

10 ஆண்டில் Electronics Communication பெரிதாக வளர்ச்சி பெறும்'

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில், ஐ.டி., துறையைப் போல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறை பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என, கல்வித்துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், டி.என்.இ.ஏ., இணையதளம் வாயிலாக நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்று, பி.இ., - பி.டெக்., படிக்க விரும்புவோருக்காக, தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி வளாகத்தில், நேற்றுமுன் தினம் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியான சாய்ஸ் பில்லிங் பதிவிடும் வழிமுறைகள், கட் ஆப் எவ்வாறு இறுதி செய்து இடம் ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து, கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் பேசியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் வரை, இன்ஜினியரிங் படிப்புகளில் சேர தயக்கம் இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. இன்ஜி., படிப்புகளுக்கு மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; 2.50 லட்சம் பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளனர்.

தற்போது படிக்கும்போதே, இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்க நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்து கொள்கின்றன. சில ஆண்டுகளாக ஐ.டி., மற்றும் உற்பத்தி துறைகளில் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

ஏ.ஐ., தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, கோடிங் என்பதை தாண்டி, நிறுவனங்களின் பிரச்னைகளை புரிந்து அதற்கு தீர்வு வழங்கும் திறன் மாணவர்களுக்கு தேவை. எலக்ட்ரானிக்ஸ் துறையில் இந்தியா பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த துறையில், ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில், எலக்ட்ரானிக்ஸ் துறை பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

உற்பத்தி துறையிலும் தொடர்ந்து முதலீடு அதிகரித்து வருவதால், அதிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் சமீபகாலமாக இன்ஜினியர் தேவை அதிகமாக உள்ளதால், ஜப்பான், தைவான், ஜெர்மன் உள்ளிட்ட மற்ற நாட்டு மொழிகளையும் கற்பது அவசியம்.

இன்ஜினியரிங் படித்த உடன் வேலை கிடைக்க, கல்லுாரியில் சேரும் முதல் நாளில் இருந்து மாணவர்கள் நன்கு படிப்பதுடன், தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

5 நாளில் கல்லுாரியில் சேர்வது அவசியம்
ஸ்ரீரங்கம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவிப் பேராசிரியர் காளிதாஸ் பேசியதாவது:

மூன்று கட்டங்களாக இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங்கில், சாய்ஸ் பில்லிங் முக்கியம்; இது, மூன்று நாட்கள் நடக்கும். கல்லுாரி பெயர், மாவட்டம் போன்றவற்றை, சாய்ஸ் முறையில் தேர்வு செய்யலாம்.

முதலில் உள் நுழையும், யூசர் ஐ.டி., - பாஸ்வேர்ட் முக்கியம். அதன் வாயிலாகத்தான் எல்லாம் நடக்கும். நான்கு மற்றும் ஐந்தாம் நாள், தற்காலிக இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான டென்டேடிவ் கன்பர்மேஷன் கேட்கப்படும்.

ஆறாம் நாள், அக்சப்ட் அண்டு ஜாய்ன் என்ற, அதாவது ஒதுக்கீட்டை ஏற்று சேர முன் வந்தோருக்கு, புரொவிஷனல் அலாட்மெண்ட் ஆர்டர் வரும். அதை பெற்ற ஐந்து நாட்களுக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்.

அதேபோல், அக்சப்ட் அண்டு அப்வேர்டு என கொடுத்தவர்களுக்கு, டென்டேடிவ் அலாட்மெண்ட் ஆர்டர் வரும். அவர்கள், டி.என்.இ.ஏ., மையம் சென்று, குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி, ஆன்லைன் மூலம் சேரலாம்.

ஐந்து நாட்களுக்குள் கல்லுாரியில் சேராவிட்டால், அந்த இடம் அடுத்துள்ள மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். அபவேர்டு அண்டு டிக்லைன் என கொடுத்தவர்களுக்கு, 13ம் நாள் ஒரு அலாட்மெண்ட் வரும். அந்த ஆர்டரை, ஒதுக்கப்பட்ட கல்லுாரிக்கு எடுத்து சென்று, நேரடியாக சேரலாம்.

கவுன்சிலிங் குறித்த முழு விபரங்களுக்கு, www.tneaonline.org என்ற இணையதளத்தை பார்க்கவும். இவ்வாறு அவர் பேசினார்.

வேலைக்கு கல்வியுடன் திறமை அவசியம்: அஸ்வின்
வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:

கடந்த ஆண்டைவிட, இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இந்தாண்டுக்கான, கட் ஆப் அதிகமாக இருக்கும். கம்யூட்டர் சயின்ஸ்., இ.சி.இ., - இ.இ.இ.,போன்ற படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளன.

இப்போது, பிராண்ட், டாப் கல்லுாரியில் படிக்கிறீர்கள் என்பது மட்டும் போதாது. மாணவரின் தனிப்பட்ட திறமை வாயிலாக மட்டுமே, வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

கல்லுாரி சேரும் நாள் முதல் நன்றாக படித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், கவனிக்கும் திறன் போன்றவற்றை, வளர்த்துக் கொள்ள வேண்டும். 'சி, சி பிளஸ் பிளஸ், ஜாவா' போன்றவற்றில் நல்ல திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏ.ஐ., தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உலக அளவில் பெரிய நிறுவனங்களில், வேலைக்கு ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும், போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, தேர்வு செய்யப்படுவர்.

அரசு பணிக்கு செல்ல விரும்புவோர், கேட் தேர்வுக்கு தயாராக வேண்டும். இதற்கு, கல்லுாரி சேரும் போது, பயிற்சி எடுக்க வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மத்திய அரசு பணிக்கு செல்ல முடியும்.

இதற்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்து, படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல், சிவில் இன்ஜி., படிப்புகளுக்குல அரசு பணிகளில், அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News