Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 12, 2025

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்!!!


மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்து இருக்கிறது.
அந்த வகையில் டெட் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் கடந்த 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வை எழுத சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் முதல் 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டு (2013) 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

மற்ற ஆண்டுகளில் நடந்த 4 தேர்வுகளிலும் விண்ணப்பப் பதிவு 4 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால் இந்த ஆண்டு இதற்கு முன்பு நடந்த 4 டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை காட்டிலும் அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஏற்கனவே பணியில் இருந்து, டெட் தேர்வை எழுதாதவர்களும் அதை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள இந்த டெட் தேர்வை எழுதுவதற்கு இந்த ஆசிரியர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்ததால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கான தேர்வு வருகிற நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment