Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 25, 2025

அரசு கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்


அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 881 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்தாா்.

மாணவர்களின் கல்வி சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்ய புதன்கிழமை (செப் 24) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக போற்றி இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ் புதல்வன்”, “முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை” போன்ற பல்வேறு முதன்மையான தனித்துவமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

உலகளவில் அனைத்து துறைகளிலும் நமது மாணாக்கர்கள் சிறந்து விளங்கவே இந்த சிறப்பான திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

அதனை, நம் மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்தி உலகளவில் சிறந்த திறன்மிக்கவர்களாக சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

முதல்வரின் ஆணைக்கிணங்க 2025-26 ஆம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று (24.09.2025) முதல் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு அக்டோர் 8 கடைசி நாளாகும். மேலும், ஜூலை 21 ஆம் தேதி அறிவிப்பின்படி, ஏற்கனவே கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.

தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கெளரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர். தகுதியுள்ள நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment