Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 2, 2025

டெட் ' தேர்வு கட்டாயம் ; தீர்ப்பு ஏற்கக் கூடியதா ஆசிரியர் சங்கங்களின் கருத்து



ஆசிரியர் பணியில் சேரவும், பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து, ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்த கருத்துக்கள்:

தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தி தொடர்பு செயலர் அருளானந்தம் கூறுகையில், “பதவி உயர்வுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்பதை வரவேற்கிறோம்.

2011க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.ஆர்.பி.,) மூலம் நியமிக்கப்பட்டவர்கள்.

அவர்களுக்கு மீண்டும் தேர்வு கட்டாயம் என்பதை ஏற்க முடியாது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,” என்றார்.

சிக்கல் ஏற்படும்

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் காஜா மொய்தீன் கூறுகையில், “2011க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்தீர்ப்பால் பாதிப்பு இல்லை.

2002 முதல் 2011 வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தொடர வாய்ப்புள்ளது.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும் சிக்கல் தொடரும்,” என்றார்.

ஏற்றுக்கொள்ள முடியாது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் அரசு கூறுகையில், “பணியில் நீடிக்க வேண்டும் என்றால், தகுதி தேர்வு கட்டாயம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் கவலைக்குரியது.

வேறு எந்த துறையிலும், பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவையில்லை. ஆசிரியர்களுக்கு மட்டும், பணியில் நீடிக்க தகுதி தேர்ச்சி ஏன் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது? உரிய கல்வித்தகுதி பெற்று, பல ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அரசு உடனடியாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, தீர்வு காண வேண்டும்,” என்றார்.

ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் இளஞ்சிற்பிகள் மாநகர ஆசிரியர் சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் கூறுகையில், '2011க்கு முன் பணியில் சேர்ந்த அனைவரும், இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்ச்சி பெற வேண்டும் என நிர்ணயம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்.

தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தொடர வாய்ப்புள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment