Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 7, 2025

கால்நடை ஆய்வாளர் பதவிக்கு பட்டப்படிப்பு அவசியம்: புதிய கல்வித் தகுதி நிர்ணயம்



கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல்-விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்-கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் 9:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும். நேரடி நியமனத்துக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு பிளஸ் 2-வில் உயிரியல் பாடம் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.

பதவி உயர்வை பொருத்தவரையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர்களாக பணியாற்றுவோர் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்று மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியை பெற்றிருந்தால் பதவி உயர்வுக்கு தகுதியுடையவர் ஆவர். நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது பதவி உயர்வு வாயிலாகவோ கால்நடை ஆய்வாளர் பணிக்கு நியமிக்கப்படுவோர் தகுதிகாண் பருவத்துக்குள் 11 மாத கால கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் தேர்வு: முன்பு கால்நடை ஆய்வாளர் (கிரேடு-2) பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி ஆகும். காலியிடங்களுக்கு ஏற்ப தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு 11 மாத காலம் கால்நடை ஆய்வாளர் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியை முடித்த பின்னர் அவர்கள் கால்நடை ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் நியமிக்கப்படுவர். தற்போது புதிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் விரைவில் நேரடி தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment