Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 23, 2025

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு



2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்டவர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ. 3,170 வித்தியாசம் உள்ளது. 20,000 ஆசிரியர்களைப் பாதிக்கும் இப்பிரச்னையைத் தீர்க்கக் கோரி, நீண்ட காலமாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களிடையே நிலவிவரும் ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி, 29-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) அறிவித்துள்ளது.

2009-ம் ஆண்டு மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒருவகையான அடிப்படை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால், ஒரே ஒரு நாள் வித்தியாசத்தில் அவர்களின் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைவு ஏற்பட்டது. இந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாடு கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

கடந்த 2009-ல் தி.மு.க. ஆட்சியில் இந்த ஊதிய முரண்பாடு உருவானது. இதனை சரி செய்யக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், இந்தச் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததுடன், தனது தேர்தல் அறிக்கையிலும் (எண் 311) இதைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை தி.மு.க-அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, இந்த விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக, 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தமிழக அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆனால், அந்தக்குழுவின் ஆய்விலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

டிச.2022-ல் அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக் குழுவால், ஊதிய இடைவெளி மேலும் அதிகரித்ததால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஒரே பதவியில், ஒரே வேலையைச் செய்பவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், இது முந்தைய அ.தி.மு.க அரசாலும் பின்பற்றப்படவில்லை, தற்போதைய தி.மு.க அரசும் இதைப் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டுகிறது.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்காததைக் கண்டித்து, 29-ம் தேதி DPI வளாகத்தில் போராட்டம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment