Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 20, 2025

ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சமத்துவம், சமூகநீதி தேவை பற்றி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டார்.

ரூ.277 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து இந்த விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது

நாம் வாழும் சமூகத்தை கட்டமைக்கும், குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பணி ஆசிரியர் பணி. ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் சொல்லித் தருபவர்கள் அல்ல. தனது கல்வியையும், அனுபவத்தையும் சொல்லித் தருபவர்கள். உங்களிடம் கல்வி கற்பது மாணவர்கள் மட்டுமல்ல; மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் என உணர வேண்டும். அறத்தின் வலிமை, நேர்மையின் தேவையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமையின் அடையாளமாக உயர்ந்து வருகின்றனர். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, தரம் உயர்ந்துள்ளது. உலக அறிமுகம் கிடைக்க சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்.

மாணவர்களிடையே சாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் உருவாகாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சமத்துவம், சமூகநீதி தேவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எதற்கு, எப்படி என்று கேட்கும் பகுத்தறிவுமிக்க தலைமுறையாக மாணவர்களை உருவாக்க வேண்டும்.

எதுவாக இருந்தாலும் கூகுள், ஏ.ஐ.யிடம் கேட்கலாம் என நம்பி இருக்கக் கூடாது. மனித சிந்தனைக்கும், ஏ.ஐ. சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும். மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்தவேண்டியது நமது கடமை. தேவையற்ற குப்பைகள் தற்போது அதிகமாகியுள்ளது; குழந்தைகளுக்கு சரியான விஷயத்தை கற்று தர வேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment