அண்ணா பல்கலைக்கழகம் முதல் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வரை வழங்கும் பல்வேறு படிப்புகளுக்கு தமிழக உயர் கல்வித்துறை அங்கீகாரம்; வேலை வாய்ப்புக்கு இணைப் படிப்புகளாக கருதப்படும் படிப்புகளின் பட்டியல்
/indian-express-tamil/media/media_files/A59Z4xHHaie0whxbmC09.jpg)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித்துறை செயலர் சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழக அரசின் உயர் கல்வி துறையின், இணை தன்மை குழுவின் ஆலோசனை கூட்டம், கடந்த மாதம், 16 ஆம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், பல்வேறு படிப்புகளுக்கு இணை தன்மை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வழங்கப்படும், 'பி.லிட்.,' தமிழ் பட்டப்படிப்பு, வேலை வாய்ப்பு வகையில், பி.ஏ., தமிழ் படிப்புக்கு சமமானது.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.ஏ (ஆங்கிலம்) மற்றும் பி.எட் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு வேலை வாய்ப்பு வகையில், எம்.ஏ., ஆங்கிலம் படிப்புக்கு சமமானது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும், பி.ஏ., ஆங்கில இலக்கியம், வேலைவாய்ப்பு வகையில், பி.ஏ., ஆங்கிலம் படிப்புக்கு சமமானது. அதேபோல, எம்.ஏ., ஆங்கில இலக்கியம், வேலை வாய்ப்பு வகையில், எம்.ஏ., ஆங்கிலம் படிப்புக்கு சமமானது. மேலும் எம்.எஸ்.சி பயோகெமிக்கல் டெக்னாலஜி படிப்பு வேலை வாய்ப்பு வகையில் எம்.எஸ்.சி பயோடெக்னாலஜி படிப்புக்கு சமமானது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும், எம்.எஸ்சி., உயிரி வேதியியல் தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு வகையில், எம்.எஸ்சி., உயிரி தொழில்நுட்ப படிப்புக்கு சமமானது. சென்னை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கணினி பயன்பாட்டுடன் கூடிய பி.எஸ்சி., இயற்பியல் படிப்பு, வேலை வாய்ப்பு வகையில், பி.எஸ்சி., இயற்பியல் படிப்புக்கு இணையானது.
கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.ஏ ஆங்கிலம் மற்றும் செயல்பாட்டு ஆங்கிலம் படிப்பு வேலை வாய்ப்பு வகையில் பி.ஏ ஆங்கிலம் படிப்புக்கு சமமானது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எஸ்.சி சிறப்பு தாவரவியல் படிப்பு வேலை வாய்ப்பு வகையில் பி.எஸ்.சி தாவரவியல் படிப்புக்கு இணையானது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும், எம்.பி.ஏ., விருப்ப பொருளாதார படிப்பு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் வழங்கும் எம்.பி.ஏ., வங்கி மற்றும் நிதி படிப்பு போன்றவை, வேலை வாய்ப்பு வகையில், எம்.பி.ஏ., பொருளாதாரம், நிதித் துறையில் நிபுணத்துவம் படிப்புக்கு சமமானது என மொத்தம் 25 பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment