Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 12, 2025

பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்



பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிப்பதை நவீனமயமாக்கவும், பெற்றோருக்கான வசதியை மேம்படுத்தவும், வெளிப்படைத் தன்மை கொண்டுவரவும் யு.பி.ஐ. போன்ற மின்னணு முறைகளைப் பயன்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை எடுத்துள்ள இந்த முன்னோடி முயற்சியானது, யு.பி.ஐ. மொபைல் வாலெட்டுகள், நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் கட்டண தளங்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது.

கல்வி அமைச்சகத்தின் சார்பில் மாநிலங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், பள்ளிகளில் நிர்வாக செயல்முறைகள், குறிப்பாக நிதி பரிவர்த்தனைகள் தொடர்பானவற்றை நவீனமயமாக்குவதன் மூலம், பள்ளிக் கல்வியின் எளிமையை வலுப்படுத்த யு.பி.ஐ-யைப் பயன்படுத்த ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் துறை, மாநிலங்கள் மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), நவோதயா வித்யாலயா சமிதி (NVS) போன்ற தன்னாட்சி அமைப்புகளையும் ஊக்கப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் முறைகள் மூலம் பள்ளிகளில் சேர்க்கை மற்றும் தேர்வுக் கட்டணங்களைச் சேகரிக்க உதவும் வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பணப்பரிமாற்றத்தை விட்டுவிட்டு டிஜிட்டல் கட்டண முறைக்கு மாறுவது பல நன்மைகளை அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இது மிகுந்த வசதியையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. மேலும், பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தபடி கட்டணங்களைச் செலுத்த முடியும்.

பள்ளிகளில் டிஜிட்டல் கட்டண முறைக்கு மாறுவது, அரசின் இலக்கான டிஜிட்டல் மாற்றத்துடன் கல்வி நிர்வாகத்தை இணைப்பதில் முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது. அதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பெரிய உலகத்தைத் திறக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment