Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 11, 2025

பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு!


அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நாள்களில் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க கர்நாடகத்தில் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் விடுப்பு கொடுக்க வேண்டும் என பல அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகத்தில் இது அமலுக்கு வரவிருக்கிறது.

பெண்களுக்கு இது உதவியாக இருந்தாலும் திட்டமிடப்படாத விடுமுறைகள் வேலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டாக இதுகுறித்து பரிசீலித்து வந்ததாகவும் இதுதொடர்பான விதிகளை வகுப்பதற்கு முன்னதாக தொழில் துறையினரிடம் கலந்தாலோசிப்போம் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், 'பெண்களுக்கு கூடுதல் விடுப்பு வழங்குவது பெரிய நிறுவனங்களுக்கு ஒரு சுமையாக இருக்காது, ஆனால் ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இது சுமையை ஏற்படுத்தக்கூடும். பெண்கள் அதிகமாக இருக்கும் நிறுவனங்களில் தொழில் உற்பத்திகளைப் பாதிக்கக் கூடும். இதனால் பெண்களை பணிக்கு அமர்த்துவதில் வருங்காலத்தில் சிக்கலாக மாறக்கூடும்' என்று கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் உமா ரெட்டி கூறினார்.

மாதவிடாய் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபட்டது, சிலருக்கு முதல் நாள் வலி இருக்கும், சிலர் இரண்டாவது நாள் அசௌகரியத்தை உணரலாம். சிலருக்கு பெரிதாக எந்த தொந்தரவும் இருக்காது. மேலும் சிலர் இந்த விடுப்பை தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று மகப்பேறு மருத்துவர் டாக்டர் சௌமியா சங்மேஷ் தெரிவித்தார்.

ஒரு பெண் காவலர் இந்த மாதவிடாய் விடுப்புக்கு வரவேற்பு தெரிவித்தாலும் அந்த விடுப்பை எடுப்பது கடினம் என்று ஆதங்கமாகக் கூறினார்.

கர்நாடக அரசு இந்த அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு மாதவிடாய் விடுப்புக்கான வழிமுறைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தியாவில் பிகார், ஒடிசா மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment