இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவர்களிடமிருந்து சொத்துக்களை வாங்கும் இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது வரை வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்க TAN எண் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த பட்ஜெட்டில் அந்த விதியை அதிரடியாக நீக்கி உள்ளனர். இந்த அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த விதி நீக்கப்பட்டுள்ளதால் இனி சொத்து வாங்குவதும் விற்பதும் எளிதாகிவிடும்.
பழைய நடைமுறை என்ன?
தற்போது வரை உள்ள விதிகளின்படி, இந்தியாவில் உள்ள ஒருவர் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து இந்தியாவில் உள்ள சொத்துக்களை வாங்க வேண்டும் என்றால், TAN எண் சமர்ப்பிக்க வேண்டும். இந்த எண் மற்ற எந்த இடத்திலும் பயன்படாது என்றாலும், இதனை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இதற்கு நிறைய அலச்சலும், கால தாமதமும் ஏற்பட்டு வந்தது. இதனால் சொத்துக்களை பதிவு செய்வதில் சிக்கலும் நீடித்து வந்தது.
புதிய நடைமுறை
இந்த பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின்படி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து சொத்துக்களை வாங்கும் இந்தியர்கள் TAN எண்ணை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக PAN எண்ணை பயன்படுத்தினாலே போதும். வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது. மத்திய அரசின் இந்த புதிய விதிமுறையால், இனி TAN எண்ணிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சொத்துக்களை பதிவு செய்வதும் இனி வேகமாக நடைபெறும். தற்போது சொத்து வாங்கும் போது PAN எண் மூலம் பதிவு செய்யும் முறைதான் நடைமுறையில் உள்ளது. இனி அது என்ஆர்ஐ சொத்துகளுக்கும் செயல்படும். தேவையற்ற ஆவண வேலைகளும், அதற்கான செலவுகளும் குறைவதால் பரிவர்த்தனை சுமூகமாக முடியும்.
மற்ற முக்கிய அறிவிப்புகள்
இது தவிர வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வெளிநாட்டு சொத்துக்களை தானாக முன்வந்து கணக்கில் காட்டுவதற்கு ஆறு மாத காலம் மத்திய அரசு வழங்குகிறது. இது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு ரியல் எஸ்டேட் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் சொத்துக்களை விற்க நினைக்கும் வெளிநாட்டு வாழ் நபர்களுக்கு, இந்த அறிவிப்பு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. சொத்து வாங்குபவர்களுக்கும் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளதால், இனி சொத்து விற்பனை எளிதாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:
Post a Comment