தமிழக அரசு, ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனி குடும்பப் பாதுகாப்பு நிதி பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. இந்த நிதியை விடுவிப்பதற்கான அதிகாரத்தை மாவட்ட அளவிலேயே வழங்கி தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.இதுவரை, அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் இயற்கை எய்தினால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 50,000 குடும்பப் பாதுகாப்பு நிதியைப் (Family Security Fund) பெறுவதில் பெரும் சிக்கல் இருந்தது.
இதற்கான கோப்புகள் சென்னையில் உள்ள கருவூல மற்றும் கணக்குத் துறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனுமதி வந்த பிறகே பணம் வழங்கப்படும். இதனால் பல குடும்பங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இந்த நடைமுறை சிக்கலைத் தீர்க்கும் வகையில், தற்போது அரசாணை எண் 267-ஐ நிதித்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இனி அந்தந்த மாவட்ட கருவூல அலுவலர்களே இந்த நிதியை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த சலுகை பொருந்தும்?
அரசு ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்தியப் பணி ஓய்வூதியதாரர்கள் (AIS).
யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?
இனி அனுமதி பெற சென்னைக்கு அலையத் தேவையில்லை. சென்னை ஓய்வூதியக் கொடுப்பனவு அலுவலர் (PPO), மாவட்ட கருவூல அலுவலர்கள் (Treasury Officers), சார் கருவூல அலுவலர்கள் (Sub-Treasury Officers) இதற்கான அனுமதியை கொடுக்கலாம். மாநிலத்திற்கு வெளியே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மட்டும் பழைய நடைமுறைப்படி சென்னை இயக்குநரகம் மூலமாகவே நிதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த அதிரடி முடிவு?
ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது வாரிசுகளுக்கு 'வாழ்நாள் நிலுவைத் தொகை' (Life Time Arrears) வழங்கப்பட்ட பின்னரே இந்த குடும்பப் பாதுகாப்பு நிதி பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைப் பாதிப்பதாக வந்த புகாரை அடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த எளிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்காக இந்த திட்டம் 1997 ஆம் ஆண்டு முதன்முதலாக தொடங்கப்பட்டது. மாதம் ரூ. 20 சந்தா செலுத்தி, ரூ. 25,000 உதவித்தொகை பெற்று வந்தனர். இப்போது மாதம் ரூ. 150 சந்தா செலுத்தி ரூ. 50,000 உதவித்தொகை பெறலாம். இந்த புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் குடும்பங்கள் இனி எவ்வித அலைச்சலுமின்றி உரிய நேரத்தில் நிதி உதவியைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்
ஓய்வூதியதாரர் இயற்கை எய்தியவுடன், அவரது வாரிசுதாரர் அல்லது நியமனதாரர் (Nominee) சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் (Pension Disbursing Office) விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான முக்கிய ஆவணங்கள்:
விண்ணப்பப் படிவம்: முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட குடும்பப் பாதுகாப்பு நிதி கோரும் விண்ணப்பம்.
இறப்புச் சான்றிதழ்: ஓய்வூதியதாரரின் அசல் இறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் நகல்.
வாரிசுச் சான்றிதழ்: வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட வாரிசுச் சான்றிதழ். Nominee பெயர் குறிப்பிடப்படாத பட்சத்தில் இது மிக அவசியம்.
ஓய்வூதியப் புத்தகம் (PPO Copy): ஓய்வூதியதாரரின் ஓய்வூதிய ஆணை நகல் (Pension Payment Order).
வாரிசுதாரரின் வங்கி விவரங்கள்: பணம் வரவு வைக்கப்பட வேண்டிய வாரிசுதாரரின் வங்கி கணக்கு புத்தக நகல் (Bank Passbook Front Page) மற்றும் ஆதார் அட்டை.
கடைசியாகப் பிடித்தம் செய்யப்பட்ட சந்தா விவரம்: ஓய்வூதியப் புத்தகத்தில் அல்லது கடைசி மாத ஓய்வூதியப் பட்டியலில் (Pension Slip) ரூ. 150 பிடித்தம் செய்யப்பட்டதற்கான ஆதாரம்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- வாரிசுதாரர் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட கருவூலம் அல்லது சார் கருவூல அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- கருவூல அலுவலர் ஆவணங்களைச் சரிபார்ப்பார். புதிய அரசாணையின்படி (G.O. 267), அவர்கள் சென்னைக்கு கோப்புகளை அனுப்பத் தேவையில்லை.
- ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், கருவூல அலுவலரே நிதியை Sanction செய்து, நேரடியாக வாரிசுதாரரின் வங்கிக் கணக்கில் ரூ. 50,000 செலுத்த உத்தரவிடுவார்.
யார் விண்ணப்பிக்கலாம்?
ஓய்வூதியதாரர் யாரை 'நியமனதாரராக' (Nominee) நியமித்திருக்கிறாரோ அவர் விண்ணப்பிக்கலாம். நியமனதாரர் இல்லாத பட்சத்தில், சட்டப்பூர்வ வாரிசுகள் விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியதாரர் இறந்த ஒரு வருடத்திற்குள் விண்ணப்பிப்பது நல்லது.



No comments:
Post a Comment