JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, April 30, 2026

கோடை விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள் - தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார்

கோடை விடுமுறையில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இணையதளம் வழியாக சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சென்னை தாம்பரம், மேடவாக்கம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதே பாடங்களை நடத்தி தொடங்கிவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அதேபோல், தினசரி பாடவேளைகள் குறித்த பள்ளிகளின் அட்டவணையும் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், ‘‘பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பல்வேறு தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருகின்றன.

வழக்கமான வகுப்புகளை போல் தினமும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பாடங்கள் நடத்துகின்றன. தொடர் வகுப்புகள் குழந்தைகளுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment