
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இரண்டாம் சுற்று கலந்தாய்வில் தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2026 கால அட்டவணையில் கொடுக்கப்பட்டிருந்த படி, இரண்டாம் சுற்றின் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்தல் நேற்றுடன் முடிவுற்ற நிலையில், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளியில் பயின்ற 6,914 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், 2,647 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளையும் சேர்த்து மொத்தமாக 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணை வெளியிடுவதற்கு முன்பாக 06.08.2026 அன்று ஒதுக்கீட்டாணைகளை 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு தரவரிசை மற்றும் விருப்ப பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதா என்று நேரடி சரிபார்ப்பு செய்யப்பட்டது.
தற்காலிக (Tentative) ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள TFC (Tamil Nadu Facilitation Centre) மையத்திற்கும், இறுதி (Provisional) ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணாக்கர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரடியாகச் சென்று 09.08.2026 முதல் 13.08.2026 வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கை பெறவேண்டும்.
13-08-2026 அன்றுக்குள், TFC மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மாணாக்கர்கள் மற்றும் கல்லூரியில் சேராத மாணாக்கர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்கள் தானாகவே (Default) ரத்து செய்யப்படும். அவ்விடங்கள் அதே சுற்றில் (Round-2) மேல்நோக்கிய நகர்வுக்காக (Upward Movement) காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்படும்.
இதுவரை நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில், 28,979 மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு சேர்க்கை பெற்று வருகின்றது. பி.ஆர்க் கலந்தாய்வில் பொது பிரிவில் 622 மாணாக்கர்களுக்கும் மற்றும் அரசு பள்ளியில் பயின்ற 7.5 சதவித ஒதுக்கீட்டில் 40 மாணாக்கர்களுக்கும் ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு சேர்க்கை பெற்று வருகின்றது.










No comments:
Post a Comment