Subscribe Us

Friday, August 28, 2026

'தகுதி வரம்புகளைத் தளர்த்த முடியாது': வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வு குறித்து அரசு திட்டவட்டம்

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் தேர்வு என்பது தகுதித் தேர்வு என்பதால், அதன் தகுதி வரம்புகளைக் குறைக்க முடியாது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும் தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான 'வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் தேர்வு' (FMGE) என்பது தகுதித் தேர்வுதானே (Screening Test) தவிர, நுழைவுத் தேர்வு (Entrance Exam) அல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரிய அதிகாரிகள், இத்தேர்வின் தகுதி வரம்புகளைத் தளர்த்தவோ குறைக்கவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளனர்.

வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தேர்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்வு மைய உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்ததாகவும் கூறி வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் தொடர்ந்து 7 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எவ்விதக் கருணை மதிப்பெண்களும் (Grace Marks) வழங்கப்படாது என்றும், முறையாகத் தயாரான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் NBEMS அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மாரடைப்பு (Myocardial infarction), பக்கவாதம் (Stroke), கடுமையான ரத்தத் தொற்று (Sepsis), சிக்கலான பிரசவங்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைகள் போன்ற உயிருக்கே ஆபத்தான சூழல்களைக் கையாளும் முழுத் திறன் மருத்துவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இந்தக் குறைந்தபட்ச தகுதி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி விளக்கினார். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் குறைவாகத் தெரிந்தாலும், முறையாக படித்து முதல்முறையாகத் தேர்வு எழுதியவர்களிடையே தேர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது.

புள்ளிவிவரங்களின்படி முதல்முறையாகத் தேர்வு எழுதியவர்களில் 35.74% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2-வது முறையாக எழுதியவர்களில் 21.45% பேரும், 5 முறைக்கு மேல் எழுதியவர்களில் வெறும் 3.29% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 2025 டிசம்பர் தேர்வில் முதல் முறை எழுதியவர்களின் தேர்ச்சி விகிதம் 47.53% ஆகவும், 5 முறைக்கு மேல் எழுதியவர்களின் தேர்ச்சி விகிதம் 5.58% ஆகவும் இருந்தது. இந்தக் கணக்கீடுகளைப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தை மட்டும் வைத்துக்கொண்டு வினாத்தாள் அனைவருக்கும் அநீதியாக அமைந்தது என்று வாதிட முடியாது என அதிகாரி குறிப்பிட்டார்.

ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் (டாக்டர்) பவன் கபூர் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழு இந்த விவகாரத்தை ஆய்வு செய்தது. காணொளி அடிப்படையிலான (Video-based) கேள்விகளோ அல்லது பொதுவான வினாத்தாள் கடினத்தன்மையோ தேர்வு முடிவுகளைப் பாதித்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனக் கண்டறிந்த அக்குழு, கருணை மதிப்பெண்கள் வழங்கப் பரிந்துரைக்கவில்லை. அதே சமயம், வெளி நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்த இந்திய மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் வகையில், தற்போது ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் இத்தேர்வை, ஆண்டுக்கு மூன்று முறையாக உயர்த்தி நடத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed