/indian-express-tamil/media/media_files/2026/07/22/rajmohan-xyz-2026-07-22-00-51-51.jpg)
டெட் தேர்வில் தோல்வி அடைந்த ஆசிரியர்களை இந்த அரசு கைவிட்டுவிடாது. அவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கு. அடுத்த சிறப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2025 இல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 31, 2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இத்தேர்வில் (தாள் 1 மற்றும் 2) தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் தமிழகத்தில் சுமார் 3.2 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதனையடுத்து பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கும் வகையில், ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டு ஜூலை மாதம் சிறப்பு டெட் தேர்வை நடத்தியது. இதனை சுமார் 2.26 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர்.
இதற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 80.8% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெட் தேர்வு தாள் 1 எழுதிய 58,902 ஆசிரியர்களில், 47,594 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 11308 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதேநேரம் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் 38.3% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். டெட் தேர்வு தாள் 2 எழுதிய 1,58,617 ஆசிரியர்களில், 60,732 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 97,885 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இந்தநிலையில், சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தோல்வி அடைந்தது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், ஒவ்வொரு ஆண்டும் வெளியான தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ரிசல்ட்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் தோல்வி அடைந்த ஆசிரியர்களை இந்த அரசு கைவிட்டுவிடாது. அவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கு. அடுத்த சிறப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவிருக்கிறோம். எஸ்.சி.இ.ஆர்.டி எனப்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் வாயிலாக இதுநாள் வரை ஆன்லைன் மூலமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இனி ஆசிரியர்களுக்கு நேரடியாக, தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். இதன்மூலம் நிச்சயம் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
தொடர்ந்து, ஏற்கனவே பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர், அவர்களுக்கு நாம் எப்படி பயிற்சி அளிக்கப் போகிறோம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், நாம் பணிபுரியும் ஆசிரியர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. டெட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் டெட் தேர்வு வருவதற்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு விலக்கு கோரி சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம். இப்போது தேர்வு எழுதிய ஆசிரியர்கள் பல்வேறு குடும்பச் சூழலுக்கு நடுவிலும், பள்ளிப் பணிச் சூழலுக்கு நடுவிலும் தேர்வு எழுதியுள்ளனர். எனவே அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வசதிகளை அளித்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து, கல்வித் தரம் கேள்விக்கு உள்ளாகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், படித்து முடித்து வருபவர்கள் தேர்வை எளிதாக அணுகலாம். ஆனால் பல்வேறு குடும்பச் சூழலுக்கு மத்தியில் தேர்வு எழுதுவது கடினம். படித்ததை எல்லாம் எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது. ஆனால் பயிற்சி அளித்தால், எளிதாக முடியும். அதனை இந்த அரசு செய்யும் என்று கூறினார்.










No comments:
Post a Comment