/indian-express-tamil/media/media_files/2026/10/23/iit-seats-2026-10-23-17-21-34.jpg)
கூட்டு நுழைவுத் தேர்வு எனப்படும் ஜே.இ.இ (JEE) அட்வான்ஸ்டு தரவுகளின்படி, இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IITs) உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 2022 முதல் 2026-ஆம் ஆண்டுக்குள் 16,598-லிருந்து 18,826-ஆக, அதாவது 13.4% அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 2,228 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விரிவாக்கத்துடன், பெண்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கூடுதல் இடங்களின் (supernumerary seats) எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது; இது 2022-ல் 1,567-ஆக இருந்த நிலையில், 2026-ல் 3,776-ஆக அதிகரித்துள்ளது. இறுதி கலந்தாய்வு சுற்றில் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கையிலிருந்து சற்று மாறுபடுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிப்பிட்ட பிரிவினருக்காகவும், மதிப்பெண் சமநிலை ஏற்படும் சூழல்களில் (tie-breaking cases) தீர்வுகாணவும் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டதே ஆகும்.
மாணவர் தரவுகள் என்ன காட்டுகின்றன?
2022 முதல் 2026 வரை, ஐ.ஐ.டி-களில் உள்ள இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளது, இருப்பினும் இந்த வளர்ச்சியின் வேகம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்டுள்ளது. 2023-ல் 787 இடங்களும், 2024-ல் 375 இடங்களும், 2025-ல் 400 இடங்களும், 2026-ல் 666 இடங்களும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. 2022-க்கும் 2023-க்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகபட்சமாக சுமார் 4.7% வளர்ச்சி பதிவானது. அதன் பிறகு, 2024-ல் 2.2% ஆகவும், 2025-ல் 2.3% ஆகவும் வளர்ச்சி வேகம் சற்று குறைந்தது; மீண்டும் 2026-ல் 3.7% ஆக அதிகரித்தது.
இந்த மொத்த இடங்களின் எண்ணிக்கையில், பெண்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கூடுதல் இடங்களும் அடங்கும். இவை ஏற்கனவே உள்ள இடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல; மாறாக, பெண் விண்ணப்பதாரர்களுக்காக வழக்கமான இடங்களுக்கு மேலதிகமாக உருவாக்கப்பட்ட கூடுதல் இடங்களாகும்.
ஐ.ஐ.டி (IIT) கல்வி நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், 2018-ஆம் ஆண்டில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அக்காலகட்டத்தில், ஐ.ஐ.டி-களில் பெண்களின் சேர்க்கை சுமார் 8 சதவீதமாக மட்டுமே இருந்தது. கூடுதல் இடங்களை உருவாக்குவதன் மூலம், 2018-19 கல்வியாண்டில் 14 சதவீதமாகவும், 2019-20-ல் 17 சதவீதமாகவும், 2020-21-ல் 20 சதவீதமாகவும் பெண்களின் சேர்க்கையை உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்காக, 2018-19 கல்வியாண்டில் பெண்களுக்கென பிரத்யேகமாக 835 கூடுதல் இடங்களும், 2019-20 கல்வியாண்டில் 1,122 கூடுதல் இடங்களும் உருவாக்கப்பட்டன. பெண் விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவிற்கான இடங்களுக்கும், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இடங்களுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதால், ஏற்கனவே இருந்த இடங்களை மறுபகிர்வு செய்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையே அதிகரிக்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றம்
பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட கூடுதல் இடங்களின் எண்ணிக்கை, 2022-ல் 1,567-ஆக இருந்ததிலிருந்து 2023-ல் 1,453-ஆகக் குறைந்தது. பின்னர், 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,566-ஆக உயர்ந்து, 2025-ல் 3,632-ஆகவும், 2026-ல் 3,776-ஆகவும் அதிகரித்தது.
மொத்த சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையில், பெண்களுக்கான இந்த கூடுதல் இடங்களின் பங்கு 2022-ல் சுமார் 9.4 சதவீதமாகவும், 2023-ல் 8.4 சதவீதமாகவும் இருந்தது. இது 2024-ல் 20.1 சதவீதமாகவும், 2025-ல் 20 சதவீதமாகவும், 2026-ல் 20.1 சதவீதமாகவும் உயர்ந்தது. 2024-ஆம் ஆண்டு முதல், மொத்த சேர்க்கை இடங்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு, பெண்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட கூடுதல் இடங்களாக உள்ளன.
2023 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில்தான் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது; அப்போது இந்த இடங்களின் எண்ணிக்கை 2,113-ஆல் அதிகரித்தது. அதன் பிறகு, இந்த அதிகரிப்பு மிகக் குறைவாகவே இருந்தது: 2025-ல் 66 இடங்களும், 2026-ல் 144 இடங்களும் அதிகரித்தன.
இந்த புள்ளிவிவரங்கள் இடங்கள் கிடைக்கும் தன்மையைக் குறிக்கின்றனவே தவிர, சேர்க்கை பெற்ற பெண்களின் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. உதாரணமாக, 2025-ல் 3,664 பெண் விண்ணப்பதாரர்கள் ஐ.ஐ.டி (IIT) இடங்களில் சேர்க்கை பெற்றனர்; இது ஒதுக்கப்பட்ட மொத்தம் 18,188 இடங்களில் 20.15% ஆகும். இவர்களில் 3,633 பேர் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் மூலமாகவும், 31 பேர் பொதுவான (பாலின வேறுபாடற்ற) இடங்கள் மூலமாகவும் சேர்க்கை பெற்றனர்.
வெளிநாட்டினர் மற்றும் ஓ.சி.ஐ / பி.ஐ.ஓ (OCI/PIO) விண்ணப்பதாரர்கள்
இந்த அறிக்கைகள், வெளிநாட்டினரையும், இந்தியக் குடிமக்களாகக் கருதப்படும் OCI/PIO (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்/ இந்திய வம்சாவளி நபர்கள்) விண்ணப்பதாரர்களையும் தனித்தனியாகப் பிரிக்கின்றன. ஐ.ஐ.டி-களில் சேர்க்கை பெற்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2022-ல் 66 ஆகவும், 2023-ல் 4 ஆகவும், 2024-ல் 2 ஆகவும் இருந்தது.
இந்தியக் குடிமக்களாகக் கருதப்படும் OCI/PIO விண்ணப்பதாரர்களில், சேர்க்கை பெற்றவர்களின் எண்ணிக்கை 2023-ல் 75-லிருந்து, 2024-ல் 88 ஆகவும், 2025-ல் 96 ஆகவும் உயர்ந்தது. இந்த இரு பிரிவினரையும் நேரடியாக ஒப்பிட முடியாது. மேலும், விண்ணப்பதாரர்களின் மொத்த எண்ணிக்கை கிடைக்கப்பெறாததால், இந்த புள்ளிவிவரங்களைக் கொண்டு சர்வதேச அளவில் ஆர்வம் அதிகரித்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியாது.










No comments:
Post a Comment