Thamizhkadal WhatsApp Channel

9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏ.ஐ. பாடம்: என்.சி.இ.ஆர்.டி. அறிவிப்பு


NCERT Artificial Intelligence course: செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து இதுவரை எந்தவித முன்அனுபவமோ அறிவோ இல்லாத மாணவர்களும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

படிப்புல இனி AI-க்கு இடமிருக்கு! 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக புதுசா வந்திருக்கு இந்த பாடம்

தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) இலக்குகளுக்கு ஏற்ப, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 'கணிப்பீட்டு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு' (Computational Thinking and Artificial Intelligence) குறித்த புதிய தொடக்க நிலை பாடத் தொகுப்பை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) அறிமுகப்படுத்தியுள்ளது.


செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே விமர்சனச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறனை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"சிக்கல்களுக்குச் சீரான மற்றும் முறையான வழியில் தீர்வு காண்பதற்கான அணுகுமுறையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் AI இயங்கும் விதம், அதன் பயன்பாடுகள், சாத்தியக்கூறுகள் மற்றும் எல்லைகளை மாணவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வுகள், நடைமுறைப் பயிற்சிகள், சோதனைகள் மற்றும் சுய சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டறிவுக் கற்றல் (Experiential Learning) முறையை இப்பாடத்திட்டம் பின்பற்றுகிறது.

கணினி அல்லது பிற டிஜிட்டல் சாதனங்கள் உள்ள மற்றும் இல்லாத பள்ளிச் சூழல்கள் இரண்டிற்கும் ஏற்ற வகையில் இதன் செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்துப் பின்னணியைக் கொண்ட மாணவர்களும் இதில் எளிதாகப் பங்கேற்க முடியும்.

தரவுத் தனியுரிமை (Data Privacy), தவறான தகவல்களைக் கண்டறிதல் (Misinformation), நடுநிலைமை (Fairness), டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் AI உருவாக்கிய தகவல்களைச் சரிபார்த்தல் ஆகிய நெறிமுறை சார்ந்த அம்சங்களுக்கு இதில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்தாலும், கற்றல் செயல்பாட்டில் மனிதனின் பகுத்தறிவு, படைப்பாற்றல் மற்றும் நெறிமுறைப் பொறுப்புகளே முதன்மையானவை என்பதை இப்பாடத்திட்டம் வலியுறுத்துகிறது.

மாணவர்கள் தொழில்நுட்பத்தை நம்பிக்கையோடும், பொறுப்புணர்வோடும் பயன்படுத்தும் விழிப்புணர்வுமிக்க பயனாளர்களாக உருவாக இந்தப் புதிய AI பாடத் தொகுதி பெரிதும் உதவும் என்று என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories