ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கையை வழங்க முடியாது! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழக நிதித்துறை பதில் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி


தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட முடியாது எனத் தமிழக நிதித்துறை தெரிவித்துள்ளது. ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அறிக்கை குறித்த தகவல்களை வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு ஏழு கட்டங்களாக 194 சங்கங்களின் கருத்துகளைக் கேட்டறிந்து ஆய்வுகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 30.12.2025 அன்று அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வல்லுநர் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், 09.01.2026 அன்று அரசாணை எண் 7 வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, 16.06.2026 அன்று அரசாணை எண் :111 வெளியிடப்பட்டது. இதன்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இடைக்காலப் பணம் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை

இந்த நிலையில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி. பிரெடெரிக் எங்கெல்ஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக நிதித்துறையிடம் மனு அளித்தார்.

அதில், வல்லுநர் குழுவின் அறிக்கை நகல் மற்றும் தமிழ்நாடு அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்களைக் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நிதித்துறையின் பொதுத் தகவல் அலுவலர், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வல்லுநர் குழு அறிக்கை குறித்த தகவல்களை வழங்க இயலாது எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் நகலை வழங்கக் கோரி நிதித்துறையில் முதல் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், தமிழக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விரிவான விதிகள் மற்றும் நெறிமுறைகளை வரையறுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசின் கொள்கை முடிவு அல்லது நிர்வாக நடவடிக்கையாக அமையக்கூடிய விவகாரங்களில் தகவல்களை வழங்க வழிவகை இல்லை என்றும் நிதித்துறை தெரிவித்துள்ளது.

2016-ல் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் இன்று வரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை

இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி. பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக 2016-ம் ஆண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 2018-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரிடம் தனது அறிக்கையை நேரில் சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

2003-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்த சுமார் 6 லட்சத்து 26 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளனர். மேலும் , புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இவர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய முக்கியப் பிரச்சினையாக ஓய்வூதியம் உள்ளது. இத்தகைய சூழலில், ஓய்வூதியப் பிரச்சினையில் தமிழக அரசு தொடர்ந்து மௌனம் காப்பது வருத்தமளிக்கிறது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில், திமுக அரசால் கொண்டுவரப்பட்ட டாப்ஸ் (TAPS) திட்டம் ஒழிக்கப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கனிவுடன் பரிசீலித்து மதிப்பீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாக பிரெடெரிக் எங்கெல்ஸ் குற்றம்சாட்டினார்.

மேலும், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடிப்படையாக அமைந்த வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடாமல் இருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel