
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» 'பறிபோகும் மாணவர்களின் எதிர்காலம்!’; நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
'பறிபோகும் மாணவர்களின் எதிர்காலம்!’; நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
வளர்ந்து வரும் அதிநவீன தகவல் தொழில்நுட்ப உலகில், 'கணினி அறிவியல்' என்பது இன்றைய மாணவர்களின் எதிர்காலக் கல்வி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புடன் நேரடியாகத் தொடர்புடைய மிக முக்கியமான துறையாகும். ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் விதமாக, தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்குத் தொடர்ச்சியாகவே முக்கியத்துவம் அளிக்கப்படாத அவல நிலை நீடித்து வருவது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஹைடெக் லேப், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணினி ஆய்வகம் தொடர்பாக ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகத் தம்பட்டம் அடிக்கப்படும் நிலையில், இதன் மூலம் மாணவர்கள் உண்மையாகவே என்ன பலன் பெற்றார்கள்? என்பது குறித்து, இதுவரை எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை.
இதுதொடர்பாக தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த பள்ளிக்கல்வித் துறையையும் உலுக்கியுள்ளன.
எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை, இதுவரை கணினி அறிவியல் தனிப்பாடம், தனிப்பாடநூல் மற்றும் உரிய பாடவேளை அறிவிக்கப்படவில்லை.
கணினி அறிவியல் பாடவேளையில் கூடுதல் பக்கம் இணைப்பது முழுமையான கணினி அறிவியல் ஆகிவிடாது. கடந்த காலங்களில் இத்திட்டத்திற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ரூ.1076 கோடி ஒப்பந்தம் மற்றும் ஆயிரக்கணக்கான கணினி ஆய்வகங்களின் செயல்பாடு குறித்து அரசு எவ்வித வெளிப்படையான விளக்கமும் அளிக்கவில்லை.
இத்திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கல்விப் பணியாளர்கள், கணினி அறிவியல் கற்பிப்பதற்குப் பதிலாக எம்.இ.எஸ், யூடிஎஸ் உள்ளிட்ட அலுவலகப் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குத் தகுந்த சம்பளமும் பிடித்தம் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டுத் தணிக்கை செய்ய வேண்டும் எனப் பலத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, செலவினம் மற்றும் ஒப்பந்த விவரங்களை உடனடியாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். அரசுப் பள்ளி கணினி ஆய்வகங்களின் செயல்பாடு மற்றும் மாணவர்கள் பெற்ற பயனினைப் பள்ளி வாரியாக ஆய்வு செய்ய வேண்டும். பயிற்றுநர் தகுதி, ஊதியம் மற்றும் பணிப்பொறுப்பைச் சரிபார்த்து, முறைகேடு உறுதியானால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் தனிப்பாடம், தனிப்பாடநூல், பாடவேளை மற்றும் செய்முறைப் பயிற்சி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் தகுதியான கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்டு, கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கணினி கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஆய்வகத்திற்கும் தகுதியான ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சமமான தொழில்நுட்பக் கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதற்குத் தமிழக அரசு உடனடியாகத் தனிக்கவனம் செலுத்தித் தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது? ஹைடெக் லேப் பெயரில் நடக்கும் இந்த மெகா ஊழல் குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.









No comments:
Post a Comment