அரசு வாங்கும் தொடர் கடனால் எகிறும் விருப்ப ஓய்வு மனுக்கள்


தமிழக அரசு தொடர்ந்து கடன் வாங்குவதால், அச்சம் அடைந்துள்ள அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு, அதிகளவில் விண்ணப்பித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு துறைகளில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள், மனிதவள மேலாண்மைத் துறை வாயிலாக வழங்கப்படுகின்றன. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60. பல்வேறு துறைகளில், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், தற்போது பணிபுரிவோருக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.அரசு துறைகளில் மூன்று லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. ஆனால், அரசின் நிதி நெருக்கடி காரணமாக, காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் நிலவுகிறது.தி.மு.க., ஆட்சியில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, அரசின் கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த மே மாதத்தில் இருந்து, ஜூன் வரை, 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. அக்டோபர் மாதம் வரை கடன் பெறுவது, இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகளிர் வெற்றி பயணம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அண்ணன் சீர் திட்டம், மாணவர்களுக்கு நவீன சைக்கிள், இல்லத்தரசிகளுக்கு மூன்று காஸ் சிலிண்டர் மானியம் என, பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. புதிய தலைமைச் செயலகம் உட்பட, பல திட்டப் பணிகளையும் தொடங்க வேண்டி உள்ளது. எனவே, கடன்சுமை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கான பென் ஷன் உள்ளிட்ட பணி ஓய்வு பலன்கள் கிடைக்குமா என்ற சந்தேகம், எழுந்துள்ளது. பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால், விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவித்து, அரசிடம் மனு கொடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது: விருப்ப ஓய்வில் செல்வதற்கான மனு கொடுத்து, 90 நாட்களுக்கு பின்னரே, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மனுவை திரும்பப் பெற அவகாசம் வழங்கப்படும். தலைமைச் செயலகத்தில் மட்டும், நீர்வளத்துறை கூடுதல் செயலர் தொடங்கி, 25க்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்துள்ளனர்.

மாநிலம் முழுதும் நுாற்றுக்கணக்கானோர் மனு அளித்துள்ளனர். பணிச்சுமை, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தாதது, அரசின் நிதி நிலைமை உள்ளிட்ட காரணங்களால், பலரும் அரசு பணியிலிருந்து வெளியேற விரும்புகின்றனர். இந்நிலையில், புதிதாக ஆட்களை தேர்வு செய்ய முடியாது என்பதால், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்த, அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories