Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 13, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுகள்: ஏப்.15, 16- இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஏப்.15, 16 ஆகிய நாள்களில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில அளவில் ஜூன் 2019-இல் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை சேவை மையங்களுக்குச் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், பழைய பாடத் திட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதோர், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத, வரும் ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுத இறுதி வாய்ப்பாகும்.


இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே கடந்த 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வு மையத்துக்கு ஏப்.15, 16 ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ பணமாக மட்டுமே அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அரசுத் தேர்வு மையங்களின் விவரத்தைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அந்த மையங்களிலேயே தேவையான விவரங்களைப் பெற்று தேர்வுக் கட்டணத்தையும் செலுத்தலாம். இதில் இணையதளத்தில் பதிவு செய்த பின், தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே அரசு தேர்வுத் துறை அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுக்கூட சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும். அதனால் இந்த ஒப்புகைச்சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.