செஸ் விளையாட்டில் புதிய கண்டுபிடிப்பு: மாற்று திறனாளி சிறுவனுக்கு தேசிய விருது

ஜெய்ப்பூர்: &'செஸ்&' விளையாட்டில், இருவருக்குப் பதில், 6, 12 மற்றும் 60 பேர், ஒரே நேரத்தில் விளையாடும் வகையில், புதிய, &'போர்டு&'களை கண்டுபிடித்த மாற்று திறனாளி சிறுவன், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சரோவர் சிங்கின் மகன், ஹிருதயேஷ்வர் சிங் பட்டி, 17. ஹிருத யேஷ்வருக்கு, பிறவியிலேயே, தசை குறைபாடு காரணமாக கால்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அவர், சக்கர நாற்காலியைத் தான் பயன்படுத்தி வருகிறார்.ஹிருதயேஷ்வருக்கு, சிறு வயதிலிருந்தே, செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது.இதை, அவரது தந்தையும் ஊக்கப்படுத்தினார். இதனால், செஸ் விளையாட்டில், புதிய விளையாட்டு முறைகளை கண்டு பிடிக்கும் முயற்சியில், அவர் ஈடுபட்டார். கடந்த, 2013ல், 9 வயதாக இருந்த போது, ஒரே நேரத்தில், ஆறு பேர் விளையாடும் வகையில், வட்ட வடிவ செஸ் போர்டை கண்டுபிடித்து, அதற்கு, காப்புரிமையையும் பெற்றார்.நாட்டிலேயே மிக இளம் வயதில் காப்புரிமை பெற்றவர்; உலகளவில் காப்புரிமை பெற்ற, இளம் மாற்று திறனாளி என்ற பெருமைகளும், ஹிருதயேஷ்வருக்கு கிடைத்தன.இதன்பின், ஒரே நேரத்தில், 12 மற்றும் 60 பேர் விளையாடக் கூடிய, வட்ட வடிவ செஸ் போர்டுகளை கண்டுபிடித்தார். இவற்றுக்கும் காப்புரிமை பெற்றார்.இப்போது,'சுடோகு' விளையாட்டில், புதிய முறையை கண்டுபிடித்து, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், சாதனை படைக்கும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் தேசிய விருதுக்கு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துணை அமைச்சகம், ஹிருதயேஷ்வரை தேர்வு செய்துள்ளது.இந்த விருது, டிச., 2ம் தேதி, டில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், ஹிருத யேஷ்வருக்கு வழங்கப்பட உள்ளது.இது பற்றி ஹிருதயேஷ்வரின் தந்தை சரோவர் கூறியதாவது: மாற்று திறனாளியாக பிறந்துவிட்டோமே என, என் மகன் ஒரு போதும் வருத்தப்பட்டது இல்லை.அவனது மன உறுதி, என்னையே வியக்க வைக்கிறது. எப்போதும், எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவன்இருப்பான். பல்வேறு நிகழ்ச்சிகளில், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றி, பரிசுகளையும் வென்றுள்ளான். அவன், சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்தாலும், செஸ் விளையாட்டில், நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளான். இவ்வாறு, சரோவர் கூறினார்.