Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 17, 2020

யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம்


கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்த பலரும் ரயில் பயணத்தை ரத்து செய்துள்ளனர் என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.




சென்னை மத்திய ரயில் நிலையத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சோதனை செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பயணிகள் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பயணத்தை ரத்து செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

''பயணத்தை தவிர்ப்பது நல்லது என நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம். தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பேசியபோது, பலரும் ரயில் பயணத்தை ரத்து செய்துள்ளனர் என்ற விவரங்களைப் பகிர்ந்தனர். மக்களிடம் விழிப்புணர்வு சென்றுசேர்ந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது எங்களுக்கு மகிழ்ச்சி. இருந்தபோதும், ரயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். இங்குவரும் பயணிகளிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்,'' என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.




தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் சுமார் 1,84,869 நபர்களுக்கு ஆரம்பகட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர், ஒரு நபருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என்றார். ''விமான நிலையங்களில் தொடர்ந்து சோதனை செய்கிறோம். அதோடு தரைவழிப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. சுங்கச்சாவடிகளில் தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்படுகிறது,'' என்றார். கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் மக்கள் தாங்களாக சோதனை செய்துகொள்ளவேண்டும் என எண்ணினால் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என செய்தியாளர்கள் கேட்டபோது, ''கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களிடம்தான் தொற்று இருக்கும் என்பதால் அவர்களை நாம் சோதனை செய்யவேண்டும். பொது மக்கள் பதற்றத்தோடு இருக்கவேண்டாம்.


வெளிநாட்டுப் பயணிகளில் கூட, அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு தொடர் சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது,''என்றார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரின் உடல்நிலை குறித்து கேட்டபோது,'' மஸ்கட்டில் இருந்து வந்தவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு உடல் சீராகிவிட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகிறோம். மருத்துவர்கள்,செவிலியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள்,'' என்றார்.

No comments:

Post a Comment