Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 9, 2018

O.T.P சொன்னால் தான் ரேஷன் கிடைக்கும்... கடத்தலை தடுக்குமா பாஸ்வேர்டு முறை!





 


ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) வழங்கி,அதை சரி பார்த்த பின்பே, ரேஷன் வழங்கும் புதிய நடைமுறை, கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
 தமிழகத்தில், 2 கோடியே, 13 லட்சத்து, 183 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மொத்தம், 6 கோடியே, 75 லட்சத்து, 44 ஆயிரத்து, 229 ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர்.





இதுவரை, 6 கோடியே, 40 லட்சத்து, 18 ஆயிரத்து, 310 ஆதார் அட்டைகளும், ஒரு கோடியே, 94 லட்சத்து, 7 ஆயிரத்து 132 மொபைல் எண்களும், ஸ்மார்ட் கார்டுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுக்க, 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகள் வாயிலாக, உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. தற்போது புழக்கத்திலுள்ள ஸ்மார்ட் கார்டில், ‘க்யூ.ஆர்.,’ கோடு என்ற மென்பொருள் பதிக்கப்பட்டுள்ளது.அதை ரேஷன் கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்து, அதன்பின்பே பொருட்கள் வழங்கப்படுகிறது. வழங்கிய பொருள் பற்றிய விபரம், ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு குறுஞ்செய்தியாகச் செல்கிறது.

இதற்குப் பதிலாக, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. இம்முறையில், பொருட்கள் தரும்முன்பே, ஸ்மார்ட் கார்டை, ரேஷன் கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்தவுடன், மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.அதில் ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை ரேஷன் கடைக்காரரிடம் தெரிவித்தால், அதை சரி பார்த்த பின்பே,பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறையினால், உண்மையான ரேஷன் கார்டுதாரருக்கே பொருட்கள் போய்ச்சேரும்; உணவுப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழகம் முழுக்க இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.








(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சோதனை முறையில், கோவை மாவட்டம் முழுவதும், இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, மொபைல் எண்ணை, ஸ்மார்ட் கார்டில் இணைக்காத கார்டு தாரர்கள் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வசதி, மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொருந்தாது என்று உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.




துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவையில் இத்திட்டத்தை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்காக எங்களிடம் தகவல்களை சென்னையிலிருந்து கேட்டுள்ளனர். ‘நாங்களும் அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளோம். அரசு உத்தரவுக்குப்பின், இத்திட்டம் கோவையில் நடைமுறைப்படுத்தப்படும்’ என்றனர். ரேஷன் பொருட்கள் கடத்தலின் முக்கிய கேந்திரமாகவுள்ள கோவையில், கடவு எண் முறையால், கடத்தல் தடுக்கப்பட்டால் மகிழ்ச்சி.
Back To Top