Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 29, 2018

12 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 12 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 20 பேர் நீட் தேர்வில் 600-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 599 - 501 வரை 188 மாணவர்கள்; 500 - 451 வரை 306 மாணவர்கள்; 450 - 401 வரை 750 மாணவர்கள்; 400 - 351 வரை 1308 மாணவர்கள்; 350 - 301 வரை 2158 மாணவர்கள் என மதிப்பெண் பெற்றுள்ளனர்.



அரசுப் பள்ளி மாணவர்கள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அரசு மருத்துவ இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 409 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 390 பேர் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 991 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 930 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1320 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.


அரசு இடங்களின் எண்ணிக்கை: தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கென 2,447, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 127, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 என மொத்தம் 2,639 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசுக்கு சமர்ப்பிக்கும் இடங்கள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 3,328 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு: தகுதி பெற்ற 1,320 அரசுப் பள்ளி மாணவர்களில் 12 பேருக்கு மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 



இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறுகையில், தரவரிசையில் முதல் 3000 இடங்களைப் பிடித்த 12 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது தவிர ஒரு சில மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கலாம் என்றார்.