Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 13, 2018

1 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி: அமைச்சர் நிலோபர் கபில்





சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டத்தில், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை பயனாளிக்கு வழங்கிய மீன்வளத் துறை அமைச்சர்

தமிழகத்தில் இதுவரை மீட்கப்பட்ட 1 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் நலத் துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் பேசும்போது, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் 1,08,604 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் நெசவுத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட மாணவர் ராமலிங்கமும், தருமபுரி மாவட்டத்தில் கட்டடத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட மாணவர் மூர்த்தியும் தற்போது மருத்துவம் படித்து வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.




தமிழகம் முன்னோடி: இதைத்தொடர்ந்து, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது, குழந்தைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறைக்காக இந்த ஆண்டு ரூ. 26 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. பத்தாம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களின் கல்வி இடைநின்றலைத் தவிர்க்கும் வகையில், அவர்களின் பெயரில் வங்கியில் வைப்பு நிதி செலுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற திட்டங்களால் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது' என்றார் அவர்.

இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்டவர்கள், கல்வி பயிற்றுநர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட களப் பணியாளர்கள் ஆகியோருக்குப் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
குறும்படம் வெளியீடு: இதைத் தொடர்ந்து, நாங்களும் பள்ளிக்கூடம் போகனும்' என்ற 3 நிமிட குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பி.பென்ஜமின், தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் சர்மா, தொழிலாளர் நலத் துறை ஆணையர் இரா.நந்தகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.