Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 18, 2018

பி.இ. சேர்க்கை: விடுபட்ட சான்றிதழ்களை விசாரணை மையத்தில் சமர்ப்பிக்கலாம்




பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்றது. இதில் பங்கேற்று, ஒருசில சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் பல்கலைக்கழக விசாரணை மையத்தில் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்ப உள்ளது. கலந்தாய்வை ஜூலை 6-ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி வெளி மாவட்ட கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 14-ஆம் தேதியும், சென்னை மையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் நிறைவு பெற்றுள்ளது.



சான்றிதழ் சரிபார்ப்பின் இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வரத் தொடங்கினர். மாலை 5.30 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற மாணவர்களில் சிலர், ஒரு சில சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருந்தபோதும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விடுபட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது.


பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கலந்தாய்வு விசாரணை மையத்தில் அவர்கள் விடுபட்ட சான்றிதழ்களை ஓரிரு நாள்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.