Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 27, 2018

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம்


நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும்,'மொபைல் ஆப்' மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை, பா.ஜ.,வை சேர்ந்த, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நேற்று துவக்கி வைத்தார்.




பாஸ்போர்ட் பெற விரும்புவோர், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை, 'பிரின்ட் அவுட்' எடுத்து, தேவையான ஆவணங்களுடன், சேவா கேந்திராவில் சமர்ப்பிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.அதன் பின், விண்ணப்பதாரரின் இருப்பிடம் மற்றும் குற்றப் பின்னணி குறித்து, போலீஸ் விசாரணை அறிக்கை அளித்ததும், பாஸ்போர்ட் அச்சடிக்கப்பட்டு, விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்நிலையில், 'மொபைல் ஆப்' வாயிலாக, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த சேவையை, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் நேற்று துவக்கி வைத்தார்.'ஆன்ட்ராய்டு' அல்லது ஐ.ஓ.எஸ்., சிஸ்டம் மூலம் இயங்கும், மொபைல் போன்களை பயன்படுத்துவோர், தங்கள் வீட்டில் இருந்தபடியே, 'எம் - பாஸ்போர்ட் ஆப்'பை பதிவிறக்கம் செய்து, அதில், தங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்.



பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தையும், இதன் மூலமே செலுத்த முடியும்.நாட்டின் எந்த பகுதியில் வசிக்கும் குடிமகனும், தான் விரும்பும் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவை தேர்ந்தெடுத்து, அங்கு சென்று, பாஸ்போர்ட்டுக்கு தேவையான அடிப்படை தகவல்களை பதிவு செய்யலாம். இந்த முறையில் விண்ணப்பிப்போர், விண்ணப்பத்தை, பிரின்ட் அவுட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், காகித பயன்பாடு குறையும்.'எம் - பாஸ்போர்ட்' மூலமே, போலீஸ் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு, பாஸ்போர்ட் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை, நேற்று முதல், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது