Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 14, 2018

பல்கலைக்கழக ஆசிரியர் பணியில் சேர முனைவர் படிப்பு கட்டாயமாகிறது




பல்கலைக்கழகத்தில் நேரடியாக துணை பேராசிரியர் பணியில் சேர வரும் 2021-22- கல்வியாண்டில் இருந்து முனைவர் படிப்பு (பிஎச்டி) கட்டாயமாக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டில் உள்ள தரமான கல்வியாளர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

இதன் ஒருபகுதியாக பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகச் சேர முனைவர் படிப்பு முடித்திருப்பது அவசியமாக்கப்படுகிறது. இதற்காக மூன்று ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதாவது 2021-22 கல்வியாண்டு முதல் முனைவர் பட்டம் என்பது கட்டாயமாகும்.




வெளிநாடுகளில் உள்ள 500 முன்னணி பல்கலைக்கழங்களில் முனைவர் பட்டம் பெற்ற இந்திய மாணவர்களும், நமது நாட்டில் பல்கலைக்கழங்களில் பணியில் சேர தகுதி உள்ளவர்கள். இப்போது, வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில் முனைவர் படிப்பு முடிந்தவர்களுக்கு அதனைக் கொண்டு நமது பல்கலைக்கழங்களில் பணியில் சேர முடியாது என்ற நிலை உள்ளது.

இனிமேல், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியில் சேருபவர்கள் ஒருமாதம் கட்டாயம் பணிப் பயிற்சி பெற வேண்டும் என்றார் அவர்.
அதே நேரத்தில், கல்லூரிகளில் நேரடியாக ஆசிரியர் பணியில் சேர முதுநிலைப் பட்டப்படிப்புடன் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற விதி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.