JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, June 14, 2018

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதோர் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க இயலாது




பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் வெளி மையங்களில் நிறைவடையுள்ள நிலையில், இதில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பி.இ. மாணவர் சேர்க்கையை இந்த முறை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 6-ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களிலும் கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் தொடங்கியது. 



இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை மையத்தைத் தவிர மற்ற அனைத்து உதவி மையங்களிலும் வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. படிப்பில் சேரவிண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் அருகில் உள்ள கலந்தாய்வு உதவி மையத்துக்கு வியாழக்கிழமை சென்று பங்கேற்கலாம்.
 
அவ்வாறு, வியாழக்கிழமையன்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 17) எந்த நேரத்திலும் வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இந்த இறுதி வாய்ப்பையும் தவறவிட்டு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத மாணவ, மாணவிகள் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார் அவர்.

சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு 044 - 22359901-20 (20 இணைப்புகள்) ஆகிய தொலைபேசி எண்களில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அசல் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த ஓரிரு நாள்களில் கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.