Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 16, 2018

CTET - ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்






மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19 கடைசி தேதியாகும்.

பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது.



மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்தத் தேர்வில் தாள்-1, தாள்-2 என இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும் பங்கேற்றால் போதுமானது. அதுபோல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது.

இரண்டு நிலைகளிலும், அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.

இந்த தேர்வானது 16-9-2018 அன்று நடத்தப்பட உள்ளது. காலையில் 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 22-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வறை அனுமதிச் சீட்டை 20-8-2018 அன்று ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி



பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்



ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டையும் எழுதுபவர்களுக்கு ரூ.1200. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 350 கட்டணம்.

இரண்டு தாள்களையும் எழுத ரூ. 600 செலுத்தினால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு சி.டி.இ.டி. இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.