JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, July 19, 2018

தொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் உள்ள 509 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துகிறது. 



மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர்களுக்கும், பிளஸ்-2 வரை தொழிற்கல்வி படித்தவர்களுக்கும் நேரில் கலந்தாய்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. சிறப்பு பிரிவினர்களுக்கு கலந்தாய்வு ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மொத்த இடங்கள் 5 ஆயிரத்து 814 ஆகும். ஆனால் விண்ணப்பித்தவர்கள் 1,650 பேர் மட்டுமே. முதல் நாளான நேற்று 600 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-



கம்ப்யூட்டர் சயின்ஸ்

கடந்த ஆண்டு கலந்தாய்வின் போது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பிரிவை அதிக மாணவர்கள் முதலில் விரும்பி எடுத்தனர். அடுத்தபடியாக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவை தேர்வு செய்தனர்.

ஆனால் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை விரும்பி எடுத்தனர். 2-வது தேர்வாக மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவையும், 3-வது தேர்வாக எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பிரிவையும் எடுத்தனர்.



மாணவர்களின் மனநிலை தற்போது மாறி உள்ளதால் பொதுப்பிரிவு கலந்தாய்வில் என்ன படிப்பை தேர்வு செய்வார்கள் என்பதை இப்போது கணிக்க முடியாது.