Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 22, 2018

ஆன்லைன் நீட் தேர்வு அறிவிப்பு ரத்து


பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தும் முடிவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கைவிடுவதாக அறிவித்தது.



சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளை ஏற்று இந்த முடிவை அந்த அமைச்சகம் எடுத்துள்ளது என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்மூலம், வழக்கம்போல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வு எழுத்துத் தேர்வாகவே இருக்கும். ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது.

இதுதொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறையும், ஆன்லைனிலும் நடத்துவதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.
அதில், ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்.



ஆன்லைன் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, கடந்த ஆண்டு எப்படி நடத்தப்பட்டதோ அதேபோல் இந்த ஆண்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பரிந்துரைகளை ஏற்று, நீட் தேர்வு பழைய முறைப்படியே நடத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே, நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி நடத்தப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நீட் தேர்வு மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஆகியவற்றை புதிதாக அமைக்கப்பட்ட தேசிய தேர்வு அமைப்பு (என்டிஏ) ஆண்டுக்கு இருமுறை நடத்தும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.