Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 22, 2018

சிபிஎஸ்இ பாட புத்தகங்கள் விவகாரம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை


1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை, சிபிஎஸ்இ பள்ளிகளில் கற்பிக்கப்படும் என்சிஇஆர்டி பரிந்துரை செய்யாத பாட புத்தகங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு என்சிஇஆர்டி விதிகளை மீறி 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் 1, 2 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



தனியாரிடமிருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளிடம் இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் திணித்து வருகின்றன. அதிகமான சுமையைச் சுமக்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஎஸ்இ பள்ளிகளில் 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதன்படி மத்திய அரசு சார்பிலும், சிபிஎஸ்இ சார்பிலும் சுற்றறிக்கைகள் அனுப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, என்சிஇஆர்டி விதிகளின்படி, 1 மற்றும் 2 -ஆம் வகுப்பு வரை ஹிந்தி அல்லது தமிழ், ஆங்கிலம், கணிதம் என 3 பாடங்களும், 3 முதல் 5 -ஆம் வகுப்பு வரை கூடுதலாக சுற்றுச்சூழல் அறிவியல் என்ற பாடத்தையும் நடத்த வேண்டும் என இருக்கும்போது, எதற்காக சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 பாடங்கள் நடத்தப்படுகின்றன, தனியார் புத்தக பதிப்பகங்களுடன் கூட்டு சேர்ந்து தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனவா, சிறு குழந்தைகளுக்கு எதற்காக இத்தனை பாடங்களை திணிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். 



அப்போது குறுக்கிட்ட மனுதாரர், சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகத்தில், இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி எது, உலகிலேயே மிகச் சிறிய வகை விமானம் எது என கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். 

இதையடுத்து, என்சிஇஆர்டி பரிந்துரைத்துள்ள பாடப் புத்தகங்களை தவிர தனியார் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கக் கூடாது. என்சிஇஆர்டி வரையறுத்துள்ள பாடங்களைத் தாண்டி, கூடுதல் பாடங்களை படிக்கும் வகையில் பாடப் புத்தகங்களை விநியோகித்தால் அவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை வரும் 27 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.