அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்அமைக்கப்படும், வாலிபால் விளையாட்டுக் கூடத்தை இடிக்க உத்தரவிட்ட அமைச்சருக்கு எதிராக, இரவு, பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலையில், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான, விளையாட்டு மைதானம், காமராஜர் காலனியில் உள்ளது. இங்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், வாலிபால் விளையாட்டு கூடம் அமைத்துக் கொடுக்க, தனியார் நிறுவனம் முன் வந்தது. இதற்காக, பள்ளி மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன், விளையாட்டுக் கூடம் அமைக்க, சுற்றிலும் சுவர்கள் கட்டப்பட்டன.கடந்த, 16ல் மைதானத்தை பார்வையிட்ட, விளையாட்டுத் துறை அமைச்சர், பாலகிருஷ்ணாரெட்டி, அரசு விளையாட்டு நிகழ்ச்சி நடத்த இடையூறாக இருப்பதாகக் கூறி, புதிய விளையாட்டு கூடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டார்.அனுமதி கொடுத்த நகராட்சி நிர்வாகமே, இடிக்கும் பணியில் இறங்கியது. இதையடுத்து,விளையாட்டு கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த, 16 முதல் மைதானத்தில் தங்கி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
நேற்று, மூன்றாவதுநாளாக, மாணவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் பெற்றோர், உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். அமைச்சரைக் கண்டித்தும், மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 'விளையாட்டுக் கூடம் கட்டும் வரை, போராட்டம் தொடரும்' என மாணவர்கள் தெரிவித்தனர்.


