மக்கள் வாழ உகந்த நகரங்களின் பட்டியல்!




மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் பட்டியலை, மத்திய அரசு நேற்று (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ளது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகமானது, மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. பொருளாதாரம், சமூகம், உள்கட்டமைப்பு, ஆட்சிமுறை உள்ளிட்ட நான்கு காரணிகளை அளவுகோலாகக் கொண்டு இந்தியா முழுவதும் சுமார் 111 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன. புனே முதலிடத்தையும், நவி மும்பை இரண்டாம் இடத்தையும், கிரேட்டர் மும்பை மூன்றாம் இடத்தையும், தானே நகரம் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன. ஆந்திர மாநிலத்தின் கோயில் நகரமான திருப்பதி, இப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.



சண்டிகர், ராய்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகிய நகரங்கள் முறையே 5, 7, 8, 9 மற்றும் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. தலைநகரான டெல்லியானது, மக்கள் வாழ்வதற்கு உகந்த பட்டியலில் 65ஆவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. அதிகரித்துவரும் மக்கள்தொகை, காற்று மாசுபாடு, வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் டெல்லி வாழ்வதற்கு உகந்ததாக இல்லை என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழகம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலுள்ள நகரங்கள் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெறவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னைக்கு 14ஆவது இடமே கிடைத்துள்ளது. தமிழகத்தின் வேறெந்த நகரமும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
Share:

Total Pageviews

Categories