Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 19, 2018

டாய்லெட் - டச் போன்: ஆபத்து எதில் அதிகம்?



உலகிலேயே மிகவும் அழுக்கான இடம் கழிவறையின் இருக்கை என்று நினைத்தீர்களானால் அது தவறு. கழிவறையின் இருக்கையைக் காட்டிலும் ஸ்மார்ட்போனின் தொடுதிரையில்தான் அதிகப்படியான கிருமிகள் இருப்பதாகச் சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.



இங்கிலாந்தைச் சேர்ந்த Insurance2Go என்னும் நிறுவனம் சமீபத்தில் ஐ-போன் 6, சாம்சங் கேலக்சி 8, கூகுள் பிக்சல் உள்ளிட்ட மொபைல்போன்களின் தொடுதிரையில் அடங்கியுள்ள ஏரோபிக் பேக்டீரியா, ஈஸ்ட் உள்ளிட்ட கிருமிகள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து ஸ்கை.காம் இணையதளத்தில் வெளியாகியிருந்த செய்தியில் கூறியிருப்பதாவது:

“சராசரியாக ஒரு ஸ்மார்ட்போனின் தொடுதிரையில் கழிவறை இருக்கையை விட மூன்று மடங்கு கிருமிகள் அடங்கியிருக்கும். மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே துணியைக் கொண்டோ, திரவத்தைக் கொண்டோ அதைச் சுத்தம் செய்கிறார்கள். இருபதில் ஒரு பகுதியினர் தங்களது ஸ்மார்ட்போனின் திரையை ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் சுத்தம் செய்கின்றனர்.

கழிவறையின் இருக்கை அல்லது ஃப்ளாஷ் டாங்கில் 24 யூனிட் கிருமிகள்தான் இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனின் திரையில் சராசரியாக 84.9 யூனிட் கிருமிகள் உள்ளன. ஓர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, மவுசில் கூட 5 யூனிட்தான் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



மேலும் ஒரு ஸ்மார்ட்போனில் மட்டும் பின் பகுதியில் 30 யூனிட்களும், லாக் பட்டனில் 23.8 யூனிட்களும், ஹோம் பட்டனில் 10.6 யூனிட்களும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் சுத்தம் செய்யப்படாத தொடுதிரையை அருவருக்கத்தக்க ஒன்றாகக் குறிப்பிடும் இந்த ஆய்வு, அது சுகாதாரம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.