JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, October 1, 2018

அரசுப்பணியை ஏற்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு கோரிக்கை!

புதுடில்லி: பதவி ஓய்வுக்கு பின் அரசு வழங்கும் எந்த பணியையும் ஏற்க வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.



நம்பிக்கை

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: ஜனநாயக மாண்பு மற்றும், நீதித்துறையில் சுதந்திரத்திற்கான போராட்டத்தில், தலைமை நீதிபதி மிஸ்ராவுக்கு நீண்ட அனுபவம் உண்டு. நீதித்துறையை சார்ந்தர்கள், அவரிடம் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். தனது தீர்ப்புகள் மற்றும் உத்தரவு மூலம், நீதித்துறை சுதந்திரத்திற்காக பெரிய போராட்டம் நடத்தியவர், புதிய பாதையை ஏற்படுத்தி கொடுப்பார் என நம்புகிறோம். ஓய்வுக்கு பின் அரசு வழங்கும் எந்த பதவியையும் ஏற்க மாட்டேன் என்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வரரின் முடிவை தலைமை நீதிபதியும் ஏற்று கொண்டு, அதற்கு புதிய அர்த்தத்தையும், வடிவத்தையும் அளிப்பார் என நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம், அவர் ஜனநாயகத்திற்கும், நீதித்துறைக்கும் பெரிய சேவை செய்ய முடியும் என கருதுகிறோம்.



சந்தேகம்

ஓய்வுக்கு பின் அரசு வழங்கும் பணியை ஏற்றால், எந்த வித காரணமும் இல்லாமல், அவரின் பணிக்காலத்தின் மீது செய்யப்பட்ட பணிகள் குறித்து கேள்வி எழுப்புகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்பதால், ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் வரை எந்த நீதிபதியும் அரசு வழங்கும் பணியை யாரும் ஏற்க கூடாது என பார் கவுன்சில் எதிர்பார்க்கிறது. செல்லமேஸ்வரை போல், நீதிபதி குரியன் ஜோசப்பும், ஓய்வுக்கு பின் எந்த பதவியையும் ஏற்க மாட்டேன் எனக்கூறியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வரும் 2ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்