Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 24, 2018

12,545 கிராமங்களை இணையம் மூலம் ஒருங்கிணைக்க ஃபைபர் கேபிள் தொழில்நுட்பம்: அமைச்சர்


தமிழகத்தில் உள்ள 12,545 கிராமங்களையும் இணையம் மூலம் ஒருங்கிணைக்க ஃபைபர் கேபிள் தொழில் நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளது என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மு.மணிகண்டன் பேசினார்.





ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான 46 ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் 3 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 256 பள்ளிகளிலிருந்து அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இக்கண்காட்சியை அமைச்சர் மு.மணிகண்டன் திறந்துவைத்துப் பேசியது:



தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை 38.5 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நலனுக்காக 14 வகையான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக 12,545 கிராமங்களை இணையம் வாயிலாக ஒருங்கிணைக்கும் நோக்கில் ஃபைபர் கேபிள் தொழில் நுட்பத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் ரூ.35 ஆயிரம் கோடி நிதி கோரப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் இருந்த இடத்தில் இருந்தே அரசின் அனைத்து திட்டங்களையும் இணைய தளம் வழியாக சிரமமே இல்லாமல் பெற்று பயனடையலாம் என தெரிவித்தார்.

விழாவில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.முருகன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரா.முருகன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் டே.பிரேம் (ராமநாதபுரம்), க.ராமர்(பரமக்குடி), க.பாலதண்டாயுதபாணி (மண்டபம்) உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் பலரும் கலந்து கொண்டனர்.