Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 24, 2018

ஏராளமான பல்கலை., கல்லூரி இருந்தும் தரமான கல்வி கிடைப்பதில் பெரிய இடைவெளி உள்ளது: ஜனாதிபதி வேதனை


''ஏராளமான பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் இருந்தும் கூட, உலகத் தரம் வாய்ந்த கல்வியை எட்டுவதில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது'' என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்துள்ளார்.



மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக் கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.


இதில் பங்கேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:இந்தியாவில் 903 பல்கலைக் கழகங்கள், 39,050 கல்லூரிகள் உள்ளன. ஆனாலும் கூட உலகத்தரம் வாய்ந்த கல்வியை எட்டுவதில் மிகப்பெரிய இடைவெளி நீடிக்கிறது. இதைப் போக்க உயர் கல்வி வழங்கும் 20 நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உதவி புரியும். உயர் கல்வியில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக படிக்கின்றனர். இன்றைய பட்டமளிப்பு விழாவில் கூட, 9 தங்கப் பதக்கங்களில் 6 பதக்கங்களை மாணவிகளே பெற்றுள்ளனர். நமது சமூகத்தின் சந்தோஷக் குறியீடான இது பாராட்டுக்குரியது.



மாணவர்களாகிய உங்களின் கல்வி, சமூகத்தில் பின்தங்கிய ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான பொறுப்பை தருகிறது. நீங்கள் கற்ற கல்வி மூலம் சக குடிமகனுக்கு எந்த வகையில் உதவலாம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பல நூற்றாண்டாக இந்தியா கற்பிக்கும் மையமாக திகழ்கிறது. இங்குள்ள தக்சிலா முதல் நாளந்தா வரையிலான பழமையான பல்கலைக்கழகங்கள் ஆசியா மற்றும் உலகின் பல்வேறு நாட்டு மாணவர்களை கவர்ந்துள்ளன. 

இந்த நவீன காலத்திலும், திறமையான வெளிநாட்டு மாணவர்களுக்கு நம் பல்கலைக்கழக வாசல்கள் திறந்தே இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்களில் 166 நாடுகளைச் சேர்ந்த 46,144 மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். அவர்களில் 33 நாடுகளைச் சேர்ந்த 329 பேர் இன்று பட்டம் பெற்றுள்ளனர். 

மாணவர்களாக இங்கு வந்த அவர்கள், நம் வாழ்நாள் நண்பர்களாகவும், இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வமற்ற தூதர்களாகவும் திரும்பிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.