
சீனாவின் ஜுஹாய் மேகோவிலிருந்து ஹாங்காங் வரை 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மிகப் பெரிய கடல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பியர்ல் ஆறு கடலில் கலக்கும் தெற்கு சீன கடல் பகுதியில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தப் பாலம்தான் உலகின் மிகப்பெரிய கடல் பாலமாகும். பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 2009ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் வரவுள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் - ஜூஹாய் மேகோ பாலத்தின் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பியர்ல் ஆற்றின் டெல்டா பகுதிகளை இணைக்கும் விதமாக இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுவரையில் ஹாங்காங்கிலிருந்து ஜுஹாய் செல்ல 3 மணி நேரம் செலவானது. இனிமேல் இந்தப் புதிய பாலத்தின் வழியாக 30 நிமிடங்களில் செல்லலாம். அக்டோபர் 24ஆம் தேதி இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.




