Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 25, 2018

ஸ்மார்ட் கார்ட், இ - புக், டிஜிட்டல் வகுப்பு என தொழில் நுட்பத்தில் அசத்தும் அரசு தொடக்கப்பள்ளி


மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வசதி, டிஜிட்டல் முறையில் பாடங்களை கற்றுத் தருவது என, நவீன தொழில் நுட்பத்தில் அசத்தி வருகிறது வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி.மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளி என, வீதிக்கு ஒரு தனியார் பள்ளி உள்ளதால், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 

இந்நிலையில், இந்த பள்ளியில்தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என, ஆர்வத்துடன் பெற்றோர் மாணவர்களை கொண்டு வந்து சேர்க்கும் பள்ளியாக, கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி உருவாகி வருகிறது. அரசின் அறிவிப்புக்கு முன்பே, 'ஸ்மார்ட் கார்ட், இ - புக்' என, பள்ளி நவீன மயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசியர் தர்மலிங்கம் கூறுகையில், "மாணவர்களுக்கு வழங்கும் ஐ.டி., கார்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என தோன்றியது. அதன்படி, மாணவனைக் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய ஸ்மார்ட் கார்டை உருவாக்கி இருக்கிறோம். 

இதில் உள்ள கியூ.ஆர்., கோடு வாயிலாக, மாணவர் சம்பந்தப்பட்ட தகவல்களை, இணையதளத்தில் பெற முடியும்," என்றார்.ஆசிரியர் மனோகரன் கூறியதாவது: இப்பள்ளியில் தற்போது மாணவ, மாணவியர், 156 பேர் படிக்கின்றனர். 

அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கியூ.ஆர்., கோடை, மொபைல்போன் அல்லது டேப்லெட்டில் ஸ்கேன் செய்யும் போது, மாணவனின் பெயர், பிறந்த தேதி, படிக்கும் வகுப்பு, பள்ளிக்கு வந்த நாட்கள், விடுமுறை எடுத்த நாட்கள், ஒவ்வொரு நாளும் மாணவனுக்கு ஆசிரியர்கள் வழங்கிய வீட்டுப் பாடங்கள், மாணவனின் தனித் திறமைகள், பள்ளியில் முக்கிய நிகழ்வுகள் ஆகியவை குறித்த தகவல்களைப் பெறலாம்.


மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து படிக்க வேண்டி உள்ளதால், அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. ஆகவே, ஸ்மார்ட் கார்டு பின்புறத்தில் ஐந்து பாடங்கள் மற்றும் கேள்வித் தாள்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

அதை ஸ்கேன் செய்தால், இ - புக் வடிவில் பாடங்களை படிக்க முடியும். அந்த பாடங்கள் வீடியோ பதிவாக உள்ளதால், மாணவர்களின் படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மாலையில் மொபைல் போனை எடுத்து விளையாடும் மாணவர்கள், பாடங்களை தேடி எடுத்து, ஆர்வமாக படிப்பதால், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால், வீடியோ மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். கேள்வித் தாள்களும் இருப்பதால், படித்தவுடன் தேர்வு எழுதலாம். கம்ப்யூட்டரே விடைத்தாளை திருத்தி மதிப்பெண் அளித்துவிடும்.

இதனை, ஆசிரியர்கள் கண்காணிக்க முடியும். இந்த இணைய தளம், இணைய இணைப்பு இல்லாத போதும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்து, ஆசிரியர் பாடம் நடத்தும்போது, வீடியோவில் பதிவு செய்து பதிவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட் கார்டு தயாரிக்க, 45 ரூபாய் செலவாகிறது.

இதற்கு சக ஆசிரியர்கள், பெற்றோர் உதவுகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் டேப்லெட் வழங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உதவி கிடைத்தால் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.