JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, October 21, 2018

தனியார் பள்ளிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கு தொடுத்த மனுதாரருக்கு அபராதம்!




பொதுநல வழக்கு: மனுதாரருக்கு அபராதம்!
மூன்றாம் நபருக்காகப் பொதுநல வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது குட் ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளி. எந்த வசதிகளும் இல்லாமல் இப்பள்ளி செயல்பட்டு வருவதாகவும், இதற்கு வழங்கப்பட்ட உரிமத்தைத் திரும்பப் பெற வேண்டுமெனவும் கோரி, வெங்கடேசன் என்ற 90 வயது முதியவர் தமிழக அரசிடம் மனு அளித்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு, காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை, இன்று (அக்டோபர் 20) விசாரணை செய்தது நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு. பொது நல வழக்குகள் விளம்பர நோக்கத்துக்காகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ, அரசியல் நலன்களுக்காகவோ தாக்கல் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டினர் நீதிபதிகள். மூன்றாவது நபருக்காகப் பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.



மனுதாரர் காந்திக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையைச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறார் நீதி நிதியத்திற்குச் செலுத்துமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.