Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 10, 2018

தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களை சிறப்பான ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கும் வகையில் தயார் செய்ய வைக்கவேண்டும். தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.






புதுக்கோட்டை,நவ,9- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.



கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது, தற்போது மழைக்காலமாதலால் ஒவ்வொரு பள்ளியிலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் வகை லார்வாக்கள் உருவாகாதவாறு பள்ளிக்கழிப்பறை, பள்ளிவளாகம் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்க தலைமையாசிரியர்கள் தீவிர கவனம் செலுத்திடவேண்டும்.




மேலும் ஒவ்வொரு மாணவருடைய வீட்டிலும்,கிராமத்திலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் உருவாகாதவாறு சுற்றுப்புறத்தூய்மையினை பராமரிக்க மாணவர்கள் மூலமாக பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும், விழிப்புணர்வு செய்ய வைக்க தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் தீவிரமாக செயலாற்றவேண்டும்.


பேரிடர் மேலாண்மை குறித்து மாக் ட்ரில்,பள்ளி பேரிடர் மேலாண்மைத்திட்டம் ஆகியவை ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படும் விதம் ஒவ்வொரு மாதமும் அறிக்கையாக புகைப்படத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகம்,மாவட்டக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படவேண்டும்.


சுற்றுச்சூழல் மேலாண்மை மேம்பட நெகிழி பொருட்களால் ஏற்படும் தீமைகளை தடுக்கும்பொருட்டு ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பள்ளி வளாகத்தில் விளம்பர பலகை அமைத்தல் மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து பிளாஸ்டிக் இல்லா பள்ளியையும், சூழலையும் உருவாக்கவேண்டும்.




குறிப்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திடத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 100 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இம்பார்ட் என்னும் ஆய்வுக்கட்டுரைத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.




ஒன்றிய,மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் மாநிலப்போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.இதற்காக ஒன்றிய அளவில் கருத்தாளர்கள்,மாவட்ட அளவில் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.அவர்களின் ஆலோசனைகளை பெற்று தேர்வு செய்யப்பட்ட 100 பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாடவாரியாக புதுமை முயற்சிகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் அடங்கிய சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை தயார் செய்து புதுக்கோட்டை மாவட்ட மாணவர்கள் சாதனை படைக்கசெய்ய வைக்க தலைமையாசிரியர்கள் தூண்டுகோலாக இருந்து செயல்பட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.




இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் இலுப்பூர் க. குணசேகரன், அறந்தாங்கி(பொ) கு.திராவிடச்செல்வம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, தலைமையாசிரியர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்..

No comments:

Post a Comment