Sunday, December 23, 2018

மாவட்டத்துக்குள் இடமாறுதல்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ரத்து

மாவட்டத்துக்குள் பணியாற்றும் பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களை இடமாற்றம் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.





பள்ளிக் கல்வித்துறையில் நிகழாண்டு ஜூன் மாதம் நிர்வாக சீர்திருத்தம் அமலுக்கு வந்தது. 

பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் இருந்த பல அதிகாரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இதன்படி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவரவர் மாவட்டத்தில் நிர்வாக ரீதியான இடமாறுதல் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டது. 





இந்தநிலையில் சில மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையற்ற இடமாறுதல்களை மேற்கொள்வதாகவும், இது குறித்து சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரியப்படுத்தாமல் இருந்ததாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களை நிர்வாக மாறுதல் செய்யும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 





இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாவட்ட அளவிலான இடமாறுதல்களால் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாகப் பணிகளில், காலியிட பட்டியலை சரியாக பராமரிக்க முடியவில்லை. 

எனவே, பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம். இருப்பினும் நிர்வாகக் காரணங்களால் அவசரச் சூழ்நிலை காரணமாக அவ்வாறு மாறுதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு (பணியாளர் தொகுதி) தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும் என அதில் கூறியுள்ளார்.





No comments:

Post a Comment